எம்எல்ஏ உதவியாளருக்கு 25,000 ரூபாய்.. ஆனால்தூய்மை பணியாளர்களுக்கு ரூ.25,000 சம்பளம் கொடுக்க முடியாதா?
முதலமைச்சர் விஜய்யை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை. தூய்மை பணியாளர்கள் கேட்கும் ஊதிய உயர்வு ரூ.25,000-ஐ அரசால் கொடுக்க முடியாதா?” என தூய்மை பணியாளர்களுடன் சென்னை மாநகராட்சி பேச்சுவார்த்தை நடத்தியது குறித்து உழைப்போர் உரிமை இயக்கத்தின் தலைவர் பாரதி கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை மாநகராட்சி ஆணையருடன் நடந்த பேச்சுவார்த்தைக்குப் பிறகு பேட்டியளித்த உழைப்போர் உரிமை இயக்கத்தின் தலைவர் பாரதி, “அரசு பெண் ஊழியர்களின் மூன்றாவது குழந்தைப்பேறுக்கு ஓராண்டு விடுமுறை கொடுக்குறீங்க. வரவேற்கிறோம். ஆனால், அதே பெண் தூய்மைப் பணியாளர்களின் முதல் குழந்தைப்பேறுக்கு ஒருநாள் கூட ஊதியத்துடன் கூடிய விடுமுறை கிடையாது.. MLA-களுக்குக் கார் கொடுப்பதை மட்டும் யோசிக்கத் தோணுது உங்களுக்கு. ஏன், தூய்மை பணியாளர்களுக்குச் சம்பளம் கொடுப்பதில் என்ன பிரச்சனை? எம்.எல்.ஏ உதவியாளருக்கு ரூ.25,000 மாதம் தேவைப்படும் என்று நினைக்கும் முதல்வருக்கு தூய்மைப் பணியாளர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.25,000 சம்பளம் கொடுக்க முடியாதா? 10,20 வருடம் வேலை பார்த்த தூய்மை பணியாளர்களுக்கு ரூ.19,000 போதவில்லை என்று சொன்னால் எம்.எல்.ஏவுக்கு எரிபொருள் உள்ளிட்ட செலவுக்கு ரூ.75,000 கொடுப்பது ஏன்?” எனக் கேள்வி எழுப்பினார்.

