திருப்பதி பக்தர்களே உஷார்! உங்களை ஏமாற்ற உலா வரும் போலி வெப்சைட்... தேவஸ்தானம் போட்ட பரபரப்பு எச்சரிக்கை!

 
tirupati

ஆந்திராவின் திருப்பதி திருமலையில் புகழ்பெற்ற ஏழுமலையான் கோவில் உள்ளது. கோவிலை திருமலை திருப்பதி தேவஸ்தானம் நிர்வகித்து வருகிறது. தரிசனம், தங்குமிடம் போன்றவற்றிற்கு முன்பதிவு செய்ய தேவஸ்தானத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் மற்றும் மொபைல் போன் செயலி பயன்பாட்டில் உள்ளது.

இந்நிலையில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:சமூக வலைதளங்களில் பரவி வரும் ttddevasthanam.online என்ற போலி இணையதளத்தை திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் பாதுகாப்பு மற்றும் பறக்கும் படை கண்டறிந்துள்ளது. இந்த இணையதளம் பக்தர்களை ஏமாற்றும் நோக்கத்தில் தேவஸ்தானத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தை போன்றே வடிவமைக்கப்பட்டு உள்ளது.இந்த போலி இணையதளம், ஆகஸ்டு, செப்., மற்றும் அக்., மாதங்களுக்கான ஸ்ரீவாரி தரிசனம் மற்றும் சேவை டிக்கெட்டுகளுக்கு முன்பதிவு செய்யலாம் என பொய்யான தகவலை வெளியிட்டு வருகிறது.

இந்த போலி இணையதளத்தின் முக்கிய நோக்கமே, ஸ்ரீவாரி தரிசன டிக்கெட் பெயரில் பக்தர்களிடம் இருந்து பணம் பறிப்பதுடன், தேவஸ்தானத்தின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்துவதுமாகும்.இந்த மோசடி இணையதளத்தை உடனடியாக நீக்குமாறு சம்பந்தப்பட்ட டொமைன் தள நிர்வாகத்திடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த மோசடியில் ஈடுபட்டவர்கள் குறித்து தேவஸ்தானம் சார்பில் போலீசிலும் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. பக்தர்களை ஏமாற்றும் இத்தகைய செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.தரிசனம், தங்குமிடம், சேவை டிக்கெட்டுகள் மற்றும் பிற ஆன்லைன் சேவைகளை முன்பதிவு செய்யும்போது தேவஸ்தானத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் மற்றும் மொபைல் போன் செயலியை மட்டுமே பக்தர்கள் பயன்படுத்த வேண்டும். சமூக வலைதளங்களில் பரவும் அங்கீகாரமற்ற இணையதளங்கள் அல்லது இணைப்புகளை நம்பவோ, பயன்படுத்தவோ வேண்டாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.