பொதுமக்களே உஷார்..! – தரமற்ற மருந்துகளை ஒழிக்க மத்திய அரசு எடுத்துள்ள தடாலடி நடவடிக்கை!
இந்தியாவில் தரமற்ற மருந்துகள் சந்தையில் தொடர்ந்து புழக்கத்தில் இருந்து வருகிறது. இதை தடுக்க தரமற்ற மருந்துகளை தயாரிக்கும் நிறுவனங்களின் உற்பத்தி உரிமத்தை, உடனடியாக நிறுத்துவதற்கான புதிய விதிமுறைகளை மத்திய அரசு முன்மொழிந்துள்ளது.
குறிப்பிட்ட முக்கியத் தரக் அளவுகோல்களில் 'தரமற்றவை' (Not of Standard Quality - NSQ) எனக் கண்டறியப்படும் மருந்துகளின் தயாரிப்பு உரிமங்களை (Manufacturing Licences) உடனடியாக இடைநிறுத்தம் (Immediate Suspension) செய்யும் வகையில், 1945-ஆம் ஆண்டின் மருந்துகள் விதிகளில் (Drugs Rules, 1945) திருத்தங்களை மேற்கொள்ளப் பரிந்துரைத்துள்ளதாக மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் அறிவித்துள்ளது.
பொதுமக்களின் சுகாதாரம் மற்றும் நோயாளிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, தரம் குறைந்த மருந்துகள் கண்டறியப்பட்டவுடன் விரைவான ஒழுங்குமுறை நடவடிக்கைகளை எடுக்கவும், அவற்றின் உற்பத்தி மற்றும் விநியோகம் தொடர்ந்து நடைபெறுவதைத் தடுத்து நிறுத்தவும், விதிமுறைகளுக்குக் கட்டுப்படுவதை மேலும் வலுப்படுத்தவும் இந்தப் புதிய திருத்தங்கள் முனைகின்றன.
தற்போது அமலில் உள்ள விதிகளின்படி, உற்பத்தி உரிமத்தை இடைநிறுத்தம் செய்வதற்கோ அல்லது ரத்து செய்வதற்கோ முன்னதாகக் காரணங்கேட்கும் நோட்டீஸ் (Show-cause notice) வழங்குவது உள்ளிட்ட சட்டப்பூர்வ நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டியிருந்தது. ஆனால், புதிய சட்டத்திருத்தத்தின் மூலம் தற்காலிகத் தடை விதிக்கப்பட்ட பிறகு, கட்டாயச் சீர்திருத்த நடவடிக்கைகளை எடுத்த பின்னரே அந்தத் தடையை நீக்க முடியும்.
அதாவது, சம்பந்தப்பட்ட தயாரிப்பு நிறுவனம், இந்தத் தரக்குறைபாட்டிற்கான மூலக்காரணத்தைச் சரியாக ஆய்வு செய்து (Root Cause Analysis), உரியச் சீரமைப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை (CAPA) உரிம அதிகாரியின் (Licensing Authority) திருப்திக்கு ஏற்ப முழுமையாகச் செயல்படுத்தும் வரை இந்த இடைநிறுத்தத் தடை தொடரும் என அமைச்சகம் தெளிவுபடுத்தியுள்ளது.
சம்பந்தப்பட்ட தயாரிப்பு நிறுவனம் உரியச் சீர்திருத்த நடவடிக்கைகளைச் செயல்படுத்தி, அதை உரிம அதிகாரி நேரில் ஆய்வு செய்து உறுதி செய்த பிறகே, இடைநிறுத்த உத்தரவு ரத்து செய்யப்படும் எனச் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தத் திருத்தங்கள் மூலம் சந்தைக்கு வரும் மருந்துகளின் தரம் தீவிரமாகக் கண்காணிக்கப்படும் என்றும், தரம் குறைந்த மருந்துகளுக்கு எதிராக உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்பட்டு, மருந்து உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்களின் பொறுப்புக்கூறல் அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த வரைவுத் திருத்தங்கள் பொதுமக்களின் கலந்தாய்வுக்காக வெளியிடப்பட்டுள்ளன. இது தொடர்பான ஆட்சேபனைகள் மற்றும் பரிந்துரைகளைப் பங்குதாரர்கள் மற்றும் பொதுமக்கள் 30 நாட்களுக்குள் அனுப்பலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. கருத்துக்களை 'துணைச் செயலாளர் (மருந்துகள்), சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம்' என்ற முகவரிக்குத் தபால் மூலமாகவோ அல்லது drugsdiv-mohfw@gov.in என்ற மின்னஞ்சல் முகவரி மூலமாகவோ அனுப்பி வைக்கலாம்.

