"அண்ணன் சீர் திட்டப் பயனாளிகளே உஷார்!" – பலன்களைப் பெற இது கட்டாயம்... தமிழக அரசின் புதிய அரசாணை!

 
1

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டு உள்ளதாவது;

அண்ணன் சீர் திட்டத்தின் கீழ் நிர்ணயிக்கப்பட்ட தகுதிகளை பூர்த்தி செய்யும் பெண்களுக்கு அவர்களின் திருமணத்தின் போது 22 காரட் தங்க நாணயம் 8 கிராம் மற்றும் ஒரு பட்டுப்புடவை வழங்கப்படுகிறது. இத்திட்டம் சமூக நல இயக்குநரகம் வழியாக செயல்படுத்தப்படுகிறது. திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் பெண்கள் தங்களிடம் ஆதார் எண் இருப்பதற்கான சான்றை சமர்பிக்க வேண்டும் அல்லது ஆதார் அங்கீகாரம் நடைமுறையை நிறைவு செய்ய வேண்டும்.

ஆதார் எண் இல்லாத பெண்கள் அல்லது இதுவரை ஆதாருக்கு விண்ணப்பிக்காமல் இருப்பவர்கள் திட்டத்தில் பதிவு செய்யும் முன்பாக, ஆதார் பதிவுக்கு விண்ணப்பிக்க வேண்டும். அதற்காக, இந்திய தனித்துவ அடையாள ஆணைய (UIDAI) இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஆதார் பதிவு மையங்களை அணுகலாம். ஆதார் பதிவு மையங்கள் அருகில் இல்லாமல், ஆதார் பெறுவதில் பெண்களுக்கு சிரமம் ஏற்பட்டால் அவர்களுக்கு வசதியான இடங்களில் பதிவு முகாம்களை ஏற்படுத்தித் தருமாறு சம்பந்தப்பட்ட துறைக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. ஆதாருக்கு விண்ணப்பித்து எண் ஒதுக்கப்படும் வரை, மாற்று அடையாள ஆவணங்களை சமர்ப்பிக்கலாம். அதற்கு ஆதார் பதிவு அடையாளச்சீட்டு அல்லது பின்வரும் ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை சமர்ப்பிக்கலாம். அந்த ஆவணங்கள் சரிபார்க்கப்படும்.

ஆவணங்கள் விவரம்;

  • புகைப்படத்துடன் கூடிய வங்கி அல்லது அஞ்சலக கணக்குப் புத்தகம்
  • பான்கார்டு
  • பாஸ்போர்ட்
  • ரேஷன் அட்டை
  • வாக்காளர் அடையாள அட்டை
  • 100 நாள் வேலைஉறுதி திட்ட அட்டை
  • புகைப்படத்துடன் கூடிய கிசான் கணக்குப் புத்தகம்
  • டிரைவிங் லைசென்ஸ்
  • அரசு அதிகாரி அல்லது வட்டாட்சியர் வழங்கிய புகைப்பட அடையாள சான்றிதழ்
  • புகைப்படத்துடன் கூடிய அரசு அடையாள அட்டை

கைரேகை தரம் குறைவு காரணமாக, ஆதார் அங்கீகாரம் பெற சிக்கல் ஏற்பட்டால் கருவிழிகள் பதிவு அல்லது முக அங்கீகாரம் வழியாக சரிபார்க்கும் வசதிகள் ஏற்படுத்தப்பட வேண்டும். மேற்கண்ட முறைகளில் அங்கீகாரம் பெற முடியாத சூழல் ஏற்பட்டால் ஆதார் கடிதத்தில் உள்ள க்யூஆர் கோடு சரிபார்த்து திட்ட பயன்களை வழங்கலாம். இந்த வசதிகளை சம்பந்தப்பட்ட அரசு துறைகள் ஏற்படுத்தி தர வேண்டும்.

அனைத்து நடைமுறைகளிலும் தோல்வி அடைந்தால் மத்திய அரசின் விதிவிலக்கு கையாளுதல் வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.

இவ்வாறு அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.