பள்ளி மாணவர்களே உஷார்..! இனி பள்ளிக்கு பைக் ஓட்டி வந்தால் வாகனம் பறிமுதல் செய்யப்படும்..!
தமிழக பள்ளிக் கல்வித் துறை, மாணவர்கள் இருசக்கர வாகனங்களை பயன்படுத்துவது குறித்து முக்கிய அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குநர் எஸ். கண்ணப்பன் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
இதன்படி, பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர் தலைமையில் சாலை பாதுகாப்பு மன்றம் அமைக்கப்பட வேண்டும். காலை வழிபாட்டுக் கூட்டத்தில் தினமும் சாலை பாதுகாப்பு குறித்துப் பேச வேண்டும். மாணவர்கள் இருசக்கர வாகனங்களில் வந்தால், அதைப் பறிமுதல் செய்து பெற்றோரிடம் ஒப்படைக்க வேண்டும்.
போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு ஆணையரகத்தின் பரிந்துரையின் அடிப்படையில் மாணவர்களிடம் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை அதிகரிக்க பள்ளிகளில் பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.அனைத்து பள்ளிகளிலும் சாலை பாதுகாப்பு மன்றம் அமைக்க வேண்டும். இந்த மன்றத்தை உடற்கல்வி ஆசிரியர்கள் வழிநடத்த வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும், தினமும் காலை வழிபாட்டு கூட்டத்தில் சாலை பாதுகாப்பு குறித்த தகவல்கள் மற்றும் விழிப்புணர்வு கருத்துகளை மாணவர்களுடன் பகிர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
என்சிசி, என்எஸ்எஸ், சாரணர் இயக்கம் மற்றும் இளஞ்செஞ்சிலுவை சங்க மாணவர்களுக்கு போக்குவரத்து காவல்துறை மூலம் சாலை விதிகள் குறித்த பயிற்சிகள் வழங்கப்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணிகளில் அவ்வப்போது மாணவர்களை ஈடுபடுத்தலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.மாணவர்கள் தலைக்கவசம் அணிவதின் அவசியத்தை உணர்த்தும் வகையில் பேரணிகள் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் நடத்த வேண்டும் என பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், மாணவர்கள் பள்ளிக்கு இருசக்கர வாகனங்களில் வந்தால், அந்த வாகனங்களை பறிமுதல் செய்து பெற்றோர்களை அழைத்து அறிவுரை வழங்கிய பிறகே ஒப்படைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிக்கு வெளியிலும் மாணவர்கள் இருசக்கர வாகனங்களை ஓட்டிச் செல்லாமல் இருக்க தேவையான அறிவுரைகளை தொடர்ந்து வழங்க வேண்டும் என்றும் பள்ளிக் கல்வித்துறை வலியுறுத்தியுள்ளது.

