மக்களே உஷார்..! கம்பளி போர்வை விற்பனை செய்வது போல ATM மையங்களில் நூதன முறையில் கொள்ளை..!

 
1 1

கும்மிடிப்பூண்டி பகுதியில் கம்பளி போர்வை விற்பனையாளர்கள் போல வேடமிட்டு, ஏ.டி.எம். மையங்களில் பொதுமக்களை ஏமாற்றி பணத்தைத் திருடி வந்த உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த முகமது அமிர் (28), ஆதில் ரஷீத் (29), நையின் முஜன் (28) ஆகிய மூன்று வாலிபர்களை போலீசார் கைது செய்துள்ளனர். கடந்த அக்டோபர் 7-ஆம் தேதி, யுவராஜ் என்ற தனியார் நிறுவன ஊழியரிடம் பணம் எடுக்க உதவுவதாகக் கூறி, அவரது ஏ.டி.எம். கார்டை நைசாக மாற்றிக் கொடுத்து, அவரது கணக்கிலிருந்து 43,000 ரூபாயைத் திருடிய புகாரின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட யுவராஜ் அளித்த புகாரைத் தொடர்ந்து, கும்மிடிப்பூண்டி போலீசார் அந்தப் பகுதியில் இருந்த 'சிசிடிவி' கேமரா பதிவுகளைத் தீவிரமாக ஆய்வு செய்தனர். அதில் கொள்ளையர்களின் உருவம் பதிவாகி இருந்ததைக் கண்டறிந்தனர். இதற்கிடையில், கோட்டக்கரை பேருந்து நிறுத்தம் அருகே உள்ள ஒரு தனியார் விடுதியில் தங்கியிருந்த மூன்று வடமாநில இளைஞர்கள், பகல் நேரங்களில் சாலையோரம் கம்பளி போர்வை விற்பனை செய்வது போல ஊர் முழுவதும் சுற்றித் திரிந்து நோட்டமிட்டது போலீசாருக்குத் தெரியவந்தது.

இதனையடுத்து அந்த விடுதியில் சோதனையிட்ட போலீசார், சந்தேகத்திற்குரிய அந்த மூன்று வாலிபர்களையும் மடக்கிப் பிடித்தனர். அவர்களிடம் நடத்திய சோதனையில், பல்வேறு வங்கிகளுக்குச் சொந்தமான 90 ஏ.டி.எம். கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. ஏ.டி.எம். கார்டுகளை ரகசியமாக மாற்றி, அப்பாவி மக்களின் பணத்தைக் கொள்ளையடிப்பதையே இவர்கள் தொழிலாகக் கொண்டிருந்தது விசாரணையில் உறுதியானது. தற்போது கும்மிடிப்பூண்டி போலீசார் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து மேலதிக விசாரணை நடத்தி வருகின்றனர்.