மக்களே உஷார்..!தமிழகத்தில் பரவும் சிக்குன்குனியா..!
சுகாதாரத் துறை இயக்குநர் சோமசுந்தரம் அனைத்து மாவட்ட சுகாதாரத்துறை அலுவலர்களுக்கு அனுப்பி உள்ள கடிதத்தில், ''தமிழ்நாட்டில் சென்னை, விழுப்புரம், தென்காசி, தேனி, கடலூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் அரியலூர் ஆகிய மாவட்டங்களில் சிக்குன்குனியா பாதிப்பு அதிகரித்து வருகிறது.
பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களாக தற்போது சென்னை, விழுப்புரம், தென்காசி, தேனி, கடலூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் அரியலூர் ஆகிய மாவட்டங்களில் சிக்குன்குனியா பாதிப்பு ஏறுமுகமாக உள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது. காய்ச்சல், மூட்டு வலி, தசை வலி மற்றும் சோர்வு போன்றவை இதன் முக்கிய அறிகுறிகளாக குறிப்பிடப்பட்டுள்ளன.
மேலும் சிக்கன் குனியா பாதிப்பிற்கு சிகிச்சை அளிப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் https://ncvbdc.mohfw.gov.in என்ற இணையதளத்திலும் வெளியிடப்பட்டுள்ளது. டெங்கு மற்றும் சிக்கன்குனியாவால் ஏற்படும் இறப்புகளை தடுக்கும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.
- காய்ச்சல் பாதிப்பு உள்ள பகுதிகளில் போதுமான ரத்த மாதிரிகளைச் சேகரித்து 'IgM Elisa' பரிசோதனை மூலம் பாதிப்பை உறுதி செய்ய வேண்டும்.
- மருத்துவமனைகளில் டெங்கு மற்றும் சிக்குன்குனியாவுக்கெனத் தனி வார்டுகள் அமைக்கப்பட்டு, அங்கு கொசுவலைகளுடன் கூடிய படுக்கை வசதிகள் உறுதி செய்யப்பட வேண்டும்.
- ஏடிஸ் கொசுக்கள் உற்பத்தியாவதைத் தடுக்க தேவையற்ற பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் நீர் தேங்கும் கொள்கலன்களை அப்புறப்படுத்த வேண்டும்.
- வாரந்தோறும் தீவிரத் தூய்மைப் பணிகளை மேற்கொள்ளவும், பெரிய நீர்நிலைகளில் கொசுப்புழு நாசினிகளைத் தெளிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
- பொதுமக்களிடையே கொசுக்கடியிலிருந்து தற்காத்துக் கொள்வது மற்றும் சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைப்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த வேண்டும்.
- மாவட்ட ஆட்சியர் தலைமையில் வாரந்தோறும் ஆய்வுக்கூட்டங்கள் நடத்தப்பட்டு, நோய்க் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் குறித்து அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
- பொதுமக்கள் வீட்டைச் சுற்றியுள்ள தண்ணீர் தொட்டிகளை வாரத்திற்கு ஒருமுறை நன்கு தேய்த்துக் கழுவ வேண்டும், முழுக்கை சட்டைகளை அணியவும், தூங்கும்போது கொசுவலைகளைப் பயன்படுத்தவும் அறிவுறுத்தப்படுகிறது. தடையற்ற குடிநீர் விநியோகத்தை உறுதி செய்வதன் மூலம் வீடுகளில் அதிகப்படியான நீர் சேமிப்பைக் குறைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும், இந்த நோய்க் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளைத் தினசரி அடிப்படையில் கண்காணித்து, எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த அறிக்கையைத் தலைமையகத்திற்கு அனுப்ப வேண்டும்.'' என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


