உஷார்! மார்ச் 31-க்குள் இதைச் செய்யாவிட்டால் 100 யூனிட் இலவச மின்சாரம் ரத்து..!
ஏப்ரல் 1 முதல் மின்சார வாரியம் (TANGEDCO) புதிய நடைமுறைகளைக் கொண்டு வரத் திட்டமிட்டுள்ளது. மின்சார வாரியம் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் கொண்டுவர உள்ளதாகக் கூறப்படும் அதிரடி மாற்றங்கள் குறித்து தெரிந்துக்கொள்ளுங்கள்.
மின்சாரப் பயன்பாடு அதிகமாக இருக்கும் மதியம் மற்றும் இரவு நேரங்களில், மின்சாரத் தேவையைச் சமாளிக்க 'பீக் ஹவர்ஸ்' (Peak Hour Charges) கட்டண முறையை அறிமுகம் செய்ய மின்வாரியம் ஆலோசித்து வருகிறது. இதன்படி, மின் தேவை உச்சத்தில் இருக்கும் நேரங்களில் மின்சாரத்தைப் பயன்படுத்துவோருக்குக் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும். இந்தத் திட்டம் முதற்கட்டமாகச் சோதனை முறையில் (Pilot Basis) சில குறிப்பிட்ட மாவட்டங்களில் மட்டும் அமல்படுத்தப்பட உள்ளது. இதன் மூலம் மின் விநியோகத்தைச் சீராகப் பராமரிக்கவும், தேவையற்ற மின் விரயத்தைக் குறைக்கவும் மின்வாரியம் திட்டமிட்டுள்ளது.
வரும் ஏப்ரல் மாதம் முதல் வீடுகளில் ஸ்மார்ட் மீட்டர்கள் (Smart Meters) பொருத்தும் பணி தீவிரமடைய உள்ளது. இந்த அதிநவீன மீட்டர்கள், மொபைல் சார்ஜர் போன்ற மிகச்சிறிய அளவிலான மின் நுகர்வைக் கூட மிகத் துல்லியமாகக் கணக்கிடும் திறன் கொண்டவை. இதனால் மின் பயன்பாட்டு அளவு முந்தைய காலங்களை விடச் சற்று உயர வாய்ப்புள்ளது. இனி மின் வாரிய ஊழியர்கள் நேரில் வந்து கணக்கெடுக்க வேண்டிய அவசியம் இருக்காது; அனைத்தும் ஆன்லைன் மூலமாகவே கண்காணிக்கப்படும். மேலும், உங்கள் வீட்டில் மின்கசிவு (Leakage) ஏற்பட்டாலோ அல்லது மின் பயன்பாடு வழக்கத்தை விட அதிகரித்தாலோ, அது குறித்த எச்சரிக்கை குறுஞ்செய்தி உடனடியாக உங்கள் மொபைல் எண்ணிற்கு அனுப்பப்படும்.
தமிழக அரசு வழங்கி வரும் 100 யூனிட் இலவச மின்சாரச் சலுகையைத் தொடர்ந்து பெற விரும்புவோர், தங்கள் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பது (Aadhaar EB Link) கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதற்கான காலக்கெடு வரும் மார்ச் 31-ஆம் தேதியுடன் முடிவடைகிறது. நிர்ணயிக்கப்பட்ட தேதிக்குள் ஆதார் இணைப்பை உறுதி செய்யத் தவறினால், ஏப்ரல் மாதம் முதல் வழங்கப்படும் இலவச மின்சாரச் சலுகை ரத்து செய்யப்பட வாய்ப்புள்ளதாக மின்வாரிய வட்டாரங்கள் எச்சரித்துள்ளன. எனவே, சலுகையைப் பெறுவதில் சிக்கல் ஏற்படாமல் இருக்க நுகர்வோர் உடனடியாக ஆதார் இணைப்பை மேற்கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.

