பெங்களூருவில் தமிழகத்தை சேர்ந்த பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை!

 
 பாலியல் தொல்லை

பெங்களூருவில், பேருந்துக்காக காத்திருந்த தமிழகத்தை சேர்ந்த பெண், கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கடந்த 19ஆம் தேதி இரவு பெங்களூருவில் உள்ள கே.ஆர்.மார்க்கெட் பகுதியில் தமிழகத்தை சேர்ந்த பெண் ஒருவர் பேருந்துக்காக காத்திருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் சிலர் அந்த பெண்ணை மிரட்டி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. மேலும் அந்த கொடூரர்கள் தாலி, செல்போன், பணத்தை பறித்துவிட்டு தப்பியோடியுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் கர்நாடகா மற்றும் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

ஆளூம் காங்கிரஸ் அரசு மீது பாஜக கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளது. காங்கிரஸ் காட்சியில் சட்டம் ஒழுங்கு சீரழிந்துள்ளதாக பாஜக குற்றம் சாட்டியது. இந்த நிலையில், பா.ஜ.க. ஆட்சியில் கூட்டு பாலியல் வன்கொடுமை நடக்கவில்லையா? என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா கேள்வி எழுப்பியுள்ளார். இதனிடையே அனைத்தையும் அரசியலாக்கி நியாயப்படுத்த பார்க்கும் முதல்வர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று, கர்நாடக பா.ஜ.க. வலியுறுத்தியுள்ளது.