ஊழியராக இருப்பதை விட முதலாளியாக மாறுங்கள்!" – மாணவர்களுக்கு முதல்வர் சிவகுமார் அழைப்பு!
பெங்களூரு அரண்மனை மைதானத்தில் திறன் மேம்பாட்டு துறை சார்பில் நேற்று நடந்த, 'வெளிநாட்டில் கல்வி - 2026' திட்டத்தை துவக்கி வைத்து முதல்வர் சிவகுமார் பேசியதாவது:
நம் அரசு, நாட்டின் கல்விக்கு புதிய கதவை திறந்து வைத்து உள்ளது. அமைச்சர் சரண்பிரகாஷ் பாட்டீல் தலைமையில், வெளிநாட்டு அறிவை ஒருங்கிணைப்பதில், சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.
அறிவில் முதலீடு செய்வது அனைவருக்கும் சிறந்த சொத்தாக அமைகிறது. மனிதர்களுக்கு எல்லைகள் உண்டு; ஆனால் அறிவுக்கு எல்லைகள் கிடையாது. உலகளாவிய கல்வியை பெறுவதால், உங்களை மனரீதியாக வலிமையாக்குகிறது.
'கல்வி என்பது திருட முடியாத, தீயில் எரிக்க முடியாத, நீரில் நனைக்க முடியாத மறைக்கப்பட்ட புதையல்' என, ஆசிரியர்கள் எங்களுக்கு கற்பித்தனர்.
நாங்கள் கற்ற அறிவை யாராலும் பறிக்க முடியாது. அமைச்சரும், அரசும் உங்களுக்கு உலகத்தரம் வாய்ந்த அளவில் கல்வி கற்க வாய்ப்புகளை வழங்கி, உங்களின் எதிர்காலத்தை பிரகாசமாக்கி வருகின்றனர்.
ஒரு நிறுவனத்தில் ஊழியராக இருப்பதை விட, முதலாளியாக மாறுங்கள். பெங்களூரு உலகளாவிய நகரம். இங்கு இரண்டு லட்சம் வெளிநாட்டினர் பாஸ்போர்டுடன் பணியாற்றி வருகின்றனர். அமெரிக்காவின் கலிபோர்னியாவில் 16 லட்சம் தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள் இருக்கின்றனர்.
அதே வேளையில், பெங்களூரில் 26 லட்சம் ஐ.டி., வல்லுநர்கள் உள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் ஒரு லட்சம் பொறியாளர்கள், 13,940 டாக்டர்கள் உருவாகின்றனர். மஹாத்மா காந்தி அம்பேத்கர், ராஜாராம் மோகன் ராய் போன்ற தலைவர்கள் வெளிநாட்டில் படித்து, நாட்டுக்கு சேவை செய்துள்ளனர்.
கர்நாடக அரசும், நம் குழந்தைகள் வெளிநாட்டு பல் கலைக்கழகங்களில் படிக்க வாய்ப்பு ஏற்படுத்தி தந்துள்ளது. 80க்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று, 300க்கும் மேற்பட்ட பாடங்களை வழங்கியுள்ளன.
இது தவிர, பல்வேறு அரசு துறைகளால் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகின்றன. பல வங்கிகள் உதவி செய்து இரண்டு கோடி ரூபாய் வரை கடன் வசதியும் வழங்குகின்றன. மாநில மாணவர்கள், இந்த வாய்ப்பை நல்ல முறையில் பயன்படுத்தி கொள்ள வேண்டும். ஒளிமயமான எதிர்காலத்தை உருவாக்கி கொள்ள வேண்டும்.
நியூசிலாந்தின் குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளோம். இதனால், 3,145 மாணவர்கள் வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் படிப்பதற்காக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர்.
எங்கள் பிள்ளைகள், தங்கள் படிப்பை முடித்து போதும், மேலும் தகவல்களை பெறுவதற்காக, அவர்களை இங்கு வருமாறு அழைத்துள்ளோம். உங்கள் எதிர்காலமே மாநிலத்தின் எதிர்காலம், உங்கள் பலமே நாட்டின் பலம். மாணவர்கள், நம் சொத்து. உலகமே பெங்களூரு, கர்நாடகா வழியாக இந்தியாவை கவனிக்கிறது. நம் கலாசாரம், வரலாறு, உறவுகள் மூலம் நம் பிள்ளைகள் சிறந்த குடிமக்களாக உருவாகி வருகின்றனர். உங்கள் வேர்களை நீங்கள் மறக்கக்கூடாது. மறந்தால் நீங்கள் வெற்றி பெற மாட்டீர்கள். எனவே, உங்கள் பெற்றோரையும், ஆசிரியர்களையும் நீங்கள் மறக்க கூடாது.
இவ்வாறு அவர் கூறினார்.

