இன்றும் நாளையும் ரொம்ப உஷாரா இருங்க! நிறைய தண்ணீர் குடிங்க..!
தமிழகத்தில் வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், கடலோர தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்றும் நாளையும் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. குறிப்பாக மதிய நேரங்களில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்பதால், பொதுமக்கள் அவசியமில்லாமல் வெளியில் செல்வதை தவிர்க்கவும், அதிகளவில் தண்ணீர் பருகவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. முதியவர்கள், குழந்தைகள் மற்றும் வெளிப்புறங்களில் வேலை செய்பவர்கள் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும் என்றும், உடல் நலக்குறைவு ஏற்பட்டால் உடனடியாக மருத்துவ ஆலோசனை பெற வேண்டும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருந்ததாவது:-
சுமார் 3.1 கிமீ முதல் 4.5 கிமீ உயரத்தில் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் இருந்து மத்திய வங்கக்கடல் பகுதிகள் வரை லட்சத்தீவு, வடக்கு கேரளம், தெற்கு உள் கர்நாடகா மற்றும் ஆந்திரா பிரதேசம் வழியாக ஒரு வளிமண்டல காற்றழுத்த தாழ்வு பாதை (Trough) நிலவுகிறது.
இதன் காரணமாக இன்று. (22-05-2026): சேலம், தர்மபுரி கிருஷ்ணகிரி, நாமக்கல், திருச்சிராப்பள்ளி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, வேலூர், ஈரோடு மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன மழை பெய்யக்கூடும். தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
நாளை 23-05-2026: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
இயல்பு நிலையிலிருந்து அதிகபட்ச வெப்ப அளவின் வேறுபாடு:
24-05-2026 வரை: தமிழகம் மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் இயல்பை ஒட்டியே இருக்கக்கூடும்.
அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும் இருக்கும் நிலையில், வட கடலோர தமிழகத்தில் ஒரிரு இடங்களில் அசௌகரியம் ஏற்படலாம். தமிழ்நாட்டில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 4 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக் கூடும்
இன்றும், நாளையும் தமிழ்நாட்டின் கடலோரப் பகுதிகள், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக் கூடும்.
சென்னையை பொறுத்தமட்டில் இன்று அதிகபட்ச வெப்பநிலை 108°F வெயில் சுட்டெரிக்கும்
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

