பவாரியா கொள்ளையர்களுக்கு ஆயுள் தண்டனை: 20 ஆண்டுகளுக்குப் பின் தீர்ப்பு..!

 
1 1

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி தொகுதி அதிமுக எம்எல்ஏவாக இருந்தவர் சுதர்சனம். கடந்த 2005 ஆம் ஆண்டு ஜனவரி 9 ஆம் தேதி அதிகாலை 2.45 மணிக்கு பெரியபாளையம் அருகே தானாக்குளத்தில் உள்ள அவரது வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்த 5 பேர் கும்பல் சுதர்சனத்தை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டு மனைவி மற்றும் மகன்களை தாக்கி 62 சவரன் நகைகளை கொள்ளையடித்து சென்றது.

தனது கட்சியின் எம்.எல்.ஏ சுதர்சனம் கொல்லப்பட்டதை அறிந்ததும் அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா குற்றவாளிகளை சுட்டு பிடிக்க உத்தரவிட்டார். மேலும் குற்றவாளிகளை பிடிக்க ஐஜி ஜாங்கிட் தலைமையிலான 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை முடக்கி விடப்பட்டது. இதன் பலனாக தனிப்படையினர் முக்கிய குற்றவாளியை ஒரே மாதத்தில் பிப்ரவரி 1ம் தேதி கைது செய்தனர். இதை தொடர்ந்து மார்ச் மாதத்தில் ஹரியானா, ராஜஸ்தான் மாநிலங்களைச் சேர்ந்த பவாரியா கொள்ளையர்களை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.


மேலும் வழக்கில் தொடர்புடைய முக்கியக் குற்றவாளிகள் இருவர் செப்டம்பர் மாதத்தில் வடமாநிலத்தில் என்கவுன்ட்டர் செய்யப்பட்டனர். இது தொடர்பாக 32 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த ஓம் பிரகாஷ், அவரது சகோதரர் ஜெகதீஷ் உள்ளிட்ட 9 பேர் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் ஜாமீன் பெற்ற 3 பெண்கள் தலைமறைவாகி விட்டனர். கைது செய்யப்பட்ட முக்கிய குற்றவாளி ஓம்பிரகாஷ் பவாரியா உள்பட இருவர் சிறையிலேயே இறந்துவிட்டனர்.ஜாமீனில் விடுவிக்கப்பட்ட 3 பெண்கள் தலை மறைவாகினர். எஞ்சிய ஜெகதீஷ் உள்ளி்ட்ட 4 பேர் மீதான வழக்கு விசாரணை சென்னை 15-வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் கடந்த 20 ஆண்டுகளாக நிலுவையி்ல் இருந்து வந்தது.


இந்நிலையில் இந்த வழக்கு விசாரணை நீதிபதி ஆபிரகாம் லிங்கன் முன்பாக நடந்தது. அப்போது அரசு தரப்பில் கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர்கள் ஜி.சீனிவாசன், மகாராஜன் ஆஜராகி வாதிட்டனர். 84 பேர் சாட்சியம் அளித்தனர். 100-க்கும் மேற்பட்ட சான்றாவணங்கள் தாக்கல் செய்யப்பட்டன.

அதேபோல குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில் வழக்கறிஞர்கள் ஆர்.சங்கரசுப்பு ஆஜரானார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஆபிரகாம் லிங்கன், இந்த வழக்கில் கைதாகி கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக நீதிமன்ற காவலில் சிறையில் இருந்து வரும் ஜெகதீஷ், ராகேஷ், அசோக் ஆகிய 3 பேரும் குற்றவாளிகள் என தீர்ப்பளித்தார். இவர்களுக்கான தீர்ப்பு விவரம் நவ.24 அன்று அறிவிக்கப்படும் என 22-ம் தேதி நீதிபதி அறிவித்தார்.

இந்தநிலையில், ஜெகதீஷ், ராகேஷ், அசோக், ஆகியோருக்கு ஆயுள் தண்டனை விதித்து சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. கொலை வழக்கில் 4-வதுதாக குற்றம்சாட்டப்பட்ட ஜெயில்தார் சிங் என்பவர் விடுதலை செய்யப்பட்டார். 

அதிமுக எம்.எல்.ஏ சுதர்சனம், பவாரியா கொள்ளையர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் 20 ஆண்டுகளுக்கு பிறகு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.