மதுரையை குறிவைக்கும் பாஜக... அமித்ஷா வருகையையொட்டி மாவட்ட ஆட்சியரின் அதிரடி உத்தரவு
மதுரையில் இன்று மற்றும் நாளை ட்ரோன்கள் பறக்க தடை விதித்து மாவட்ட ஆட்சியர் சங்கீதா உத்தரவு பிறப்பித்துள்ளார்.
பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துவதற்காக இன்றிரவு (ஜூன் 7) மதுரை வருகிறார் உள்துறை அமைச்சர் அமித் ஷா. பாஜக உயர்மட்ட நிர்வாகிகள் உடன் ஆலோசனை நடத்தும் அமித் ஷா, கூட்டணித் தலைவர்களையும் சந்திப்பார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த வாரம் மதுரையில் திமுக பொதுக்குழு கூட்டத்தை கூட்டிய நிலையில், பாஜகவும் மதுரையை முன்னிலைப்படுத்துகிறது. தமிழ்நாடு பாஜகவின் புதிய தலைவரான நயினார் நாகேந்திரன் தென் மாவட்டங்களில் தனி கவனம் செலுத்திவருகிறார். மக்களவைத் தேர்தலில் மதுரை, தேனி, ராமநாதபுரம், திருநெல்வேலி, கன்னியாகுமரி தொகுதிகளில் 2 ஆம் இடம் பிடித்தது பாஜக. தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கு ஓராண்டே உள்ள நிலையில் அமித்ஷாவின் மதுரை வருகை முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் அமித்ஷா வருகையை முன்னிட்டு இன்று மற்றும் நாளை ட்ரோன்கள் பறக்க தடை விதித்து மாவட்ட ஆட்சியர் சங்கீதா உத்தரவு பிறப்பித்துள்ளார். தடையை மீறி ட்ரோன்கள் பறக்க விடுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.


