ஈபிஎஸ்-ஐ வரவேற்று மதுரை முழுக்க பேனர் வைத்த அதிமுகவினருக்கு சிக்கல்
உசிலம்பட்டி வரும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை வரவேற்க அனுமதியின்றி ப்ளக்ஸ் பேனர்கள் வைத்த அதிமுக நிர்வாகிகள் மீது 3 காவல் நிலையங்களில் 7 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி சட்டமன்ற தொகுதிக்கு மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் எனும் எழுச்சி பயணத்திற்காக இன்று மாலை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வருகை தர உள்ளார். எடப்பாடி பழனிச்சாமியை வரவேற்க செக்காணூரணி முதல் தொட்டப்பநாயக்கணூர் வரை என சுமார் 20 கிலோ மீட்டர் தொலைவிற்கு அதிமுக நிர்வாகிகள் ப்ளக்ஸ் மற்றும் கொடிகளை நட்டு வைத்துள்ளனர்.
இந்நிலையில் உரிய அனுமதியின்றி ப்ளக்ஸ் பேனர்கள் வைத்ததற்காகவும், நெடுஞ்சாலைகளில் பேனர்கள் வைக்க நீதிமன்றம் தடை விதித்தும், நீதிமன்ற உத்தரவை மீறி ஆயிரக்கணக்கான ப்ளக்ஸ் பேனர்கள் சாலையோரங்களிலும், சாலையின் நடுவிலும் வைக்கப்பட்டுள்ளதாக உசிலம்பட்டி நகர் மற்றும் தாலுகா காவல் நிலையம், செக்காணூரணி காவல் நிலையத்தில் அந்த அந்த பகுதி கிராம நிர்வாக அலுவலர்களின் புகார்களின் அடிப்படையில் IPC 3 ( 1 ) பிரிவின் கீழ் 7 வழக்குகள் அதிமுக நிர்வாகிகள் மீது பதிவு செய்யப்பட்டுள்ளது. பொது இடத்தில் அனுமதியின்றி ப்ளக்ஸ் வைப்பது, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துவது என 7 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது உசிலம்பட்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

