வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு : தொடர்ந்து 5 நாள்களுக்கு வங்கிகள் இயங்காது!

 
1

வாடிக்கையாளர்களை அதிர்ச்சி அடைய செய்யும் வகையில் தொடர்ந்து 5 நாட்கள் வங்கிகள் இயங்காது என்ற தகவல் வெளியாகியுள்ளது. வருகிற செப்டம்பர் 26 மற்றும் 27 ஆகிய தேதிகள் சனி, ஞாயிறு என வார இறுதி நாட்கள் விடுமுறையாக உள்ளது. இதனை தொடர்ந்து செப்டம்பர் 28 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை வங்கிகள் வேலை நிறுத்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இதனால் தொடர்ந்து 5 நாட்கள் வங்கிகள் இயங்காத நிலை உருவாகியுள்ளது.  வங்கி ஊழியர்களின் நீண்ட நாள் கோரிக்கையான வாரத்தில் 5 நாட்கள் வேலை நாளாக அமல்படுத்த வேண்டும், ஓய்வூதிய பலன்களை புதுப்பித்தல் மற்றும் மேம்படுத்துதல் உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்த போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர். எனவே தொடர்ந்து 5 நாட்கள் வங்கிகள் இயங்காது என்பதால் பணம் செலுத்துதல், பணம் எடுத்தல், காசோலை பரிவர்த்தனை, கடன் தொடர்பான பணிகள் போன்ற சேவைகள் பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது. சிறு வியாபாரிகள் மற்றும் தினசரி வருமானத்தை நம்பியுள்ள மக்கள் பணப் பரிவர்த்தனைகளை மேற்கொள்ள முடியாமல் சிரமப்படுவார்கள் என கூறப்படுகிறது.

அதே நேரம் ஏடிஎம் மற்றும் இணையவழிச் சேவைகள் தொடர்ந்து இயங்கினாலும், சில வங்கி சார்ந்த பணிகள் தாமதமாகலாம்.

வங்கிகள் வேலை நிறுத்தம் ஏன்?

  • வாரத்தில் 5 நாள் மட்டுமே வேலை- அனைத்து சனிக்கிழமைகளையும் வங்கி விடுமுறையாக அறிவிக்க வேண்டும்.
  • வாரத்தில் 5 நாள் வேலை தொடர்பான முன்மொழிவுக்கு இந்திய வங்கிகள் சங்கம் ஒப்புக்கொண்டு மத்திய அரசுக்கு அனுப்பியும், மத்திய அரசின் இறுதி ஒப்புதல் இன்னும் கிடைக்கவில்லை.
  • பொதுத்துறை வங்கி ஊழியர்களுக்கான செயல்திறன் அடிப்படையிலான ஊக்கத்தொகை முறையில் செய்யப்பட்ட மாற்றங்களை வங்கி ஊழியர் சங்கங்கள் எதிர்க்கின்றன.
  • ஓய்வூதியம், அகவிலைப்படி மற்றும் ஓய்வுக்காலப் பலன்கள் தொடர்பாக நீண்டகாலமாக நிலுவையில் உள்ள பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வேண்டும்
  • பலமுறை கோரிக்கை வைத்தும் தீர்வு கிடைக்கவில்லை என்று கூறும் வங்கி ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு, முதலில் செப்டம்பர் 28 முதல் 30 வரை மூன்று நாள் வேலைநிறுத்தத்தையும், தீர்வு ஏற்படாவிட்டால் அக்டோபர் 26 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தையும் அறிவித்துள்ளது.
  • நாடு முழுவதும் 85,000 வங்கி கிளைகள் இந்த வேலை நிறுத்தத்தில் பங்கேற்கின்றன.

SBI, Union Bank உள்ளிட்ட வங்கிகளும் முக்கியமான வங்கிப் பணிகளை வேலைநிறுத்தத்திற்கு முன்பே முடித்துக்கொள்ளுமாறு வாடிக்கையாளர்களைக் கேட்டுக்கொண்டுள்ளன.

 செப்டம்பர் 11 அன்று நடைபெற்ற முந்தைய நாடு தழுவிய வங்கி வேலைநிறுத்தத்தின்போது பல பொதுத்துறை வங்கிகளில் cash transactions, cheque clearances மற்றும் administrative work பாதிக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகின. அதேபோன்ற நிலை செப்டம்பர் 28–30 வேலைநிறுத்தத்திலும் ஏற்படுமா என்பது ஊழியர்களின் பங்கேற்பைப் பொறுத்திருக்கும்.

எனவே குறிப்பிட்ட தேதிக்குள் பணமாக்கப்பட வேண்டிய முக்கியமான காசோலைகளை கடைசி நேரம் வரை வைத்திருக்காமல் முன்கூட்டியே வங்கியில் செலுத்துவது நல்லது.