ஜனவரி 27ஆம் தேதியன்று வங்கி வேலைநிறுத்தம்..? தொடர்ச்சியாக 4 நாட்கள் வங்கிகள் மூடப்படும் அபாயம்!

 
1 1

ஐக்கிய வங்கி ஊழியர் கூட்டமைப்பு (UFBU) தான் வங்கி வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. தங்கள் கோரிக்கைகள் ஏற்கப்படாவிட்டால் ஜனவரி 27 அன்று வேலைநிறுத்தம் செய்வோம் என்று வங்கி சங்கங்கள் தெரிவித்துள்ளன. ஐந்து நாள் வேலை வாரத்தை அமல்படுத்த வேண்டும் என்பதே அவர்களின் முக்கிய கோரிக்கையாகும். நீண்டகாலமாக நிலுவையில் உள்ள கோரிக்கைகளை வலியுறுத்தி ஜனவரி 27 அன்று நாடு தழுவிய வேலைநிறுத்தம் நடத்தப்படும் என்று எச்சரித்துள்ளனர்.

வங்கிகளுக்கு 5 நாள் வேலை வாரத்தை அமல்படுத்தக் கோரி, வங்கி ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பான UFBU வரும் ஜனவரி 27 அன்று நாடு தழுவிய வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. ஒருவேளை இந்த வேலைநிறுத்தம் நடைபெற்றால், தமிழகம் உள்ளிட்ட நாடு முழுவதும் உள்ள அரசு வங்கிகள் தொடர்ச்சியாக நான்கு நாட்கள் இயங்காது. ஜனவரி 24 (நான்காவது சனிக்கிழமை), ஜனவரி 25 (ஞாயிறு), ஜனவரி 26 (குடியரசு தின விடுமுறை) என வரிசையாக விடுமுறை வருவதால், ஜனவரி 27-ல் வேலைநிறுத்தம் நடந்தால், மீண்டும் ஜனவரி 28-ம் தேதி அன்றுதான் வங்கிகள் திறக்கப்படும்.

முக்கியக் கோரிக்கை என்ன?

மத்திய, மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் ரிசர்வ் வங்கி (RBI), எல்ஐசி போன்ற நிறுவனங்களில் ஏற்கனவே 5 நாள் வேலை வாரம் நடைமுறையில் உள்ளது. இதேபோல் தங்களுக்கும் வாரத்திற்கு இரண்டு நாட்கள் (சனி மற்றும் ஞாயிறு) விடுமுறை அளிக்க வேண்டும் என்பதே வங்கி ஊழியர்களின் நீண்டகால கோரிக்கையாகும். இக்கோரிக்கையை வலியுறுத்தியே இந்த போராட்ட முன்னெடுப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பாதிக்கப்படும் சேவைகள்:

தொடர் விடுமுறை மற்றும் வேலைநிறுத்தத்தால் பின்வரும் சேவைகள் பாதிக்கப்படலாம்:

  • நேரடிப் பணப் பரிமாற்றம் மற்றும் டெபாசிட்.

  • காசோலை (Cheque) பரிமாற்றம்.

  • கடன் விண்ணப்பங்கள் மற்றும் இதர நிர்வாகப் பணிகள்.

இருப்பினும், ஏடிஎம் (ATM) மற்றும் ஆன்லைன் வங்கிச் சேவைகள் (Mobile Banking/Net Banking) தடையின்றிச் செயல்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவசரத் தேவைகள் உள்ள வாடிக்கையாளர்கள் முன்கூட்டியே திட்டமிட்டுக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.