சனாதன தர்மம் குறித்த பேச்சு - உதயநிதி ஸ்டாலினுக்கு பெங்களூரு நீதிமன்றம் சம்மன்!

 
udhayanidhi

சனாதன தர்மம் குறித்து பேசிய விவகாரத்தில் பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு சம்மன் அனுப்பியுள்ளது.

சென்னையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், டெங்கு, மலேரியாவை போன்று சனாதனத்தையும் ஒழிக்க வேண்டும் என பேசினார். அவரது பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், பாஜக உள்ளிட்ட பல்வேறு கட்சி தலைவர்களும் இந்த கருத்துக்கு கண்டனம் தெரிவித்தனர். உத்தரபிரதேசத்தை சேர்ந்த சாமியார் ஒருவர் உதயநிதியின் தலையை கொண்டு வந்தால் 10 கோடி ரூபாய் வழங்குவதாக கூறினார். இந்த விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றம் உள்ளிட்ட பல்வேறு நீதிமன்றங்களில் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது. சனாதன தர்மம் குறித்து பேசிய விவகாரத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிப்ரவரி 13ம் தேதி ஆஜராக வேண்டும் என பாட்னா சிறப்பு நீதிமன்றம் சம்மன் அனுப்பியது. 

Udhayanidhi

இந்த நிலையில், சனாதன தர்மம் குறித்து பேசிய விவகாரத்தில் பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு சம்மன் அனுப்பியுள்ளது. பெங்களூருவை சேர்ந்த பரமேஷ் என்பவர் அமைச்சர் உதயநிதிக்கு எதிராக வழக்கு தொடர்ந்தார். இந்த நிலையில், இந்த வழக்கு தொடர்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருகிற மார்ச் 4ம் தேதி நேரில் ஆஜராகுமாரு பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.