#BREAKING பிற மாநிலங்களுக்கு கனிமங்கள் கொண்டு செல்ல மேலும் 3 மாத தடை நீட்டிப்பு
தமிழகத்திலிருந்து வெளி மாநிலங்களுக்கு கனிமங்களை கொண்டு செல்ல விதிக்கப்பட்ட தடை மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டிலிருந்து பிற மாநிலங்களுக்கு சாதாரண கற்கள், ஜல்லி மற்றும் எம்-சாண்ட் (M-Sand) உள்ளிட்ட கனிமங்களை கொண்டு செல்ல 3 மாதங்களுக்கு தற்காலிக தடை விதித்து கடந்த ஜூலை மாதம் புவியியல் மற்றும் சுரங்கத்துறை இயக்குநர் உத்தரவிட்டார். இந்நிலையில் தமிழகத்திலிருந்து வெளி மாநிலங்களுக்கு கனிமங்களை கொண்டு செல்ல விதிக்கப்பட்ட தடை மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
எல்லையோர மாவட்டங்களில் தீவிரமாக கண்காணிக்க மாவட்ட ஆட்சியர்கள், எஸ்.பி-க்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த தற்காலிக தடை உத்தரவு உடனடியாக அமலுக்கு வருவதாகவும் கூறியுள்ளது. புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கு மட்டும் இந்தத் தடையிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் கனிம வளங்களை பாதுகாக்கவும், மாநிலத்தின் உள்கட்டமைப்பு மற்றும் கட்டுமானத் தேவைகளுக்கு முன்னுரிமை வழங்கவே இத்தகைய முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

