#BREAKING ஊட்டியில் பெட்ரோல், டீசலில் இயங்கும் இயந்திர படகுகளை இயக்க தடை

 
s

ஊட்டி பைகாரா ஏரியில் பெட்ரோல், டீசலில் இயங்கும் இயந்திர படகுகளை இயக்க கூடாது என தடை விதித்துள்ளது சென்னை உயர் நீதிமன்றம்.

Pykara lake Speed Boat Ride in Ooty Tamilnadu | Pykara lake boating |  Pykara Lake Review

ஊட்டி பைகாரா ஏரியில் படகு சவாரிக்கு பெட்ரோல், டீசல் மோட்டார் படகுகள் பயன்படுத்தப்படுவதால், ஒலி மாசு ஏற்படுவதுடன், ஏரி நீரும் மாசடைவது குறித்து சுற்றுச்சூழல் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு அமர்வின்நீதிபதிகள்  கவனத்துக்கு கொண்டுவரப்பட்டது. ஆனால், அடர்ந்த வனப் பகுதிக்குள் படகு சவாரி நடத்தப்படுவதில்லை என்றும், மாசுவை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் விளக்கம் அளித்திருந்தது.

இதையடுத்து கோவையில் உள்ள சலீம் அலி பறவையியல் கல்வி நிறுவனம் மற்றும் ஊட்டியில் உள்ள மத்திய மண் மற்றும் நீர் பாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவனம் ஆகியன, நிபுணர்களை அனுப்பி ஏரியில் மோட்டார் படகுகளின் ஒலி அளவு, ஏரி நீரின் மாதிரிகளில் உள்ள மாசின் அளவு ஆகியவை குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க  வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்துகொடுக்கும்படியும் சுற்றுலா வளர்ச்சி கழகத்துக்கும் உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதிகள் என். சதீஷ்குமார், டி. பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, அறிக்கை தாக்கல் செய்யப்படாத நிலையில், சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் அதிகாரிகள் எவரும் ஆஜராகவும் இல்லை. அதனால், உயர் நீதிமன்றத்தின் முந்தைய உத்தரவை சலீம் அலி பறவையியல் கல்வி நிறுவனம் மற்றும் மத்திய மண் மற்றும் நீர் பாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவனம்  ஆகியவற்றுக்கு அனுப்பிவைக்கும்படி, கோவை மற்றும் நீலகிரி மாவட்ட நீதிபதிகளுக்கு உத்தரவிட்டனர். அந்த உத்தரவு நகலைப் பெற்று, நிபுணர்களை நியமித்து பைகாரா ஏரியை ஆய்வுசெய்து அறிக்கை தாக்கல் செய்யும்படி அந்த இரு நிறுவனங்களுக்கும் உத்தரவிட்ட நீதிபதிகள், அதுவரை ஏரியில் பெட்ரோல் மற்றும் டீசலில் இயங்கும் இயந்திர படகுகளை இயக்க கூடாது என தடை விதித்து உத்தரவிட்டனர். இந்த வழக்கின் விசாரணை ஏப்ரல் 17ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.