கோவை ஜிடி மேம்பாலத்தில் இரவில் பயணம் செய்ய தடை
கோவை ஜிடி மேம்பாலத்தில் இன்று முதல் ஐந்து நாட்களுக்கு இரவில் பயணம் செய்ய அனுமதி இல்லை என மாநகர காவல் துறை தெரிவித்துள்ளது.
கோவை அவிநாசி சாலையில் உப்பிலிபாளையம் முதல் கோல்டுவின்ஸ் வரை சுமார் 10 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஜிடி மேம்பாலம் கடந்த திமுக ஆட்சியில் திறக்கப்பட்டது. இதன் மூலம் அவினாசி சாலை ஏற்பட்டு வந்த கடும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு ஏற்பட்டுள்ளது.இதனிடையே இம்மேம்பாலத்தில் இரவு நேரத்தில் இளைஞர்கள் ரீல்ஸ் எடுக்கும் மோகத்தில் சென்று விபத்தில் சிக்குவதாக புகார்கள் எழுந்த நிலையில், மேம்பாலத்தில் இரவு நேரங்களில் பயணிக்க மாநகர போலீசார் தடை விதித்தனர். இதனால் இரவு நேரத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக பொதுமக்கள் கடும் அதிருப்தி தெரிவித்த நிலையில், அந்த திட்டத்தை போலீசார் வாபஸ் பெற்றனர்.
இதனிடையே, இம் மேம்பாலத்தில் ஆப்டிகல் பைபர் கேபிள் பதிக்கும் பணிகள் நடைபெற உள்ளதால், பாதுகாப்பு காரணங்களுக்காக, இன்று முதல் வரும் 18ம் தேதி இரவு வரை, 5 நாட்களுக்கு இரவு 11 மணி முதல் காலை 5 மணி வரை வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை என்று போக்குவரத்து போலீசார் அறிவித்துள்ளனர்.

