பண்ணாரி- திம்பம் தேசிய நெடுஞ்சாலையில் 3 நாட்கள் கனரக வாகன போக்குவரத்துக்கு தடை
பண்ணாரி- திம்பம் இடையே தேசிய நெடுஞ் சாலையில் 3 நாட்கள் கனரக வாகன போக்குவரத்துக்கு தடை விதித்து ஈரோடு மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இது தொடர்பாக, ஈரோடு மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான கந்தசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாடு சட்டமன்ற பொது தேர்தல், 2026-இன் வாக்குப்பதிவு 23.04.2026-ஆம் தேதி அன்று நடைபெற உள்ளதால், ஈரோடு மாவட்டம் 107.பவானிசாகர் (தனி) சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மலை கிராமங்களில் உள்ள தாளவாடி மற்றும் ஆசனூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கிராமங்களுக்கு, தேர்தல் தளவாடங்களை தேர்தல் அலுவலர்கள் மற்றும் காவலர்கள் கோவை-மைசூர் தேசிய நெடுஞ்சாலை (NH-948)ல் சத்தியமங்கலம், பண்ணாரி. திம்பம் மலை பாதை வழியாக எடுத்துச்சென்று வரவேண்டியுள்ளது. மேற்படி மலைபாதையில் அதிக பாரமேற்றிய கனரக வாகனங்கள் அடிக்கடி பழுதாவதால் வாகன போக்குவரத்து தடை ஏற்படுகிறது.
இச்சூழலில் வாக்குப்பதிவுக்கான தேர்தல் தளவாடங்களை தடையின்றி எடுத்துச் செல்லும் பொருட்டு மேற்படி தேசிய நெடுஞ்சாலையில் கனரக வாகனங்களின் உள்நுழைவு மற்றும் வெளியேறும் போக்குவரத்து வருகின்ற 22.04.2026-ஆம் தேதி முதல் 24.04.2026-ஆம் தேதி வரை தடைசெய்து மேற்கண்ட மூன்று நாட்களுக்கு மாற்றுப்பாதை வழியாக கனரக வாகனங்களை இயக்க மாவட்ட நிர்வாகம் மூலம் தெரிவிக்கப்படுகிறது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

