திருச்செந்தூரில் ட்ரோன் கேமரா பறக்க விட மற்றும் ரீல்ஸ் எடுக்க தடை விதிப்பு
திருச்செந்தூரில் ட்ரோன் கேமரா பறக்க விட மற்றும் ரீல்ஸ்கள் எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில் விளங்கி வருகிறது. கடலோரம் அமைந்துள்ளதால் ஏராளமான சுற்றுலா பயணிகளும் தினம் தோறும் கோவிலுக்கு வருகை தந்து செல்கின்றனர். இந்த நிலையில் கடந்த சில தினங்களாக கோவிலில் அனுமதி இன்றி கோவிலின் மேல் மற்றும் கோவில் வளாகத்தில் ட்ரோன் பறக்க விடபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து கோவில் நிர்வாகம் அதிரடியாக நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. மேலும் கோவில் வளாகத்தில் செல்போன் மூலம் அல்லது வீடியோ கேமரா மூலம் ரீல்ஸ் எடுப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி திருச்செந்தூர் கோவில் மற்றும் கோவில் வளாகத்தில் ட்ரோன் பறக்க அதிரடியாக தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. இதற்கான அறிவிப்பை கோவில் நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. இதற்காக கோவில் வளாகம், சண்முக விலாச மண்டபம், வசந்த மண்டபம், கோவிலுக்கு உள்ளே வரும் டோல்கேட் பகுதி, வட்டாட்சியர் அலுவலகம், தேரடி பகுதி என பல்வேறு இடங்களில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் இது குறித்த அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. அந்த அறிவிப்பு பலகையில்,
திருச்செந்தூர் முருகன் கோவில் நிர்வாகம் வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பின்படி, கோவிலைச் சுற்றியுள்ள பகுதிகளில் பாதுகாப்பு மற்றும் புனிதத்தைக் கருத்தில் கொண்டு ட்ரோன் கேமராக்கள் பறக்கவிடவும், செல்போன் மற்றும் வீடியோ கேமராக்கள் மூலம் ‘ரீல்ஸ்’ (Reels) வீடியோக்கள் எடுக்கவும் அதிரடித் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை மீறி யாராவது ட்ரோன் கேமராக்களைப் பயன்படுத்தினால், அவை உடனடியாகப் பறிமுதல் செய்யப்படுவதோடு சம்பந்தப்பட்ட நபர்கள் மீது சட்டப்படி வழக்குப் பதிவு செய்யப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. அதேபோல், கோவில் வளாகத்தில் செல்போன் மூலம் வீடியோக்கள் அல்லது ரீல்ஸ் எடுப்பவர்களின் சாதனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு அவர்கள் மீதும் உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனத் திருக்கோவில் வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள அறிவிப்புப் பலகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


