திருப்பரங்குன்றம் மலை, சுற்று வட்டாரப்பகுதிகளில் ட்ரோன்கள் பறக்கத் தடை

 
மதுரை: திருப்பரங்குன்றம் கந்தசஷ்டி விழாவில் பக்தர்களுக்கு அனுமதி மறுப்பு

திருப்பரங்குன்றம் மலை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ட்ரோன்கள் பறக்கத் தடை  விதித்து மதுரை மாவட்ட காவல் ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார். 

திருப்பரங்குன்றம் மலையில் நடைபெறும் தீபம் ஏற்றும் நிகழ்வை முன்னிட்டு, மாண்புமிகு உச்சநீதிமன்றத்தின் உத்தரவின்படி சட்டம் மற்றும் ஒழுங்கைப் பராமரிக்கவும், பாதுகாப்பு மற்றும் பொதுமக்களின் நடமாட்டத்தை முறைப்படுத்தவும் மதுரை மாநகர காவல்துறை சார்பில் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வரப்படுகிறது. 

இதன் ஒரு பகுதியாக, ட்ரோன் விதிகள் 2016-ன் விதி 24-ன் கீழ், 23.11.2026 முதல் 24.11.2026 வரை திருப்பரங்குன்றம் மலை உச்சி உட்பட மலை முழுவதும், கிரிவலப் பாதைகள், திருப்பரங்குன்றம் நுழைவு வளைவு முதல் 16 கால் மண்டபம் வரை செல்லும் சாலை, கிரிவலப் பாதைக்கும் மலை அடிவாரப் பகுதிக்கும் இடைப்பட்ட பகுதிகளில், ட்ரோன்கள் மற்றும் ஆளில்லா வான்வழி விமானங்கள் (UAV) பறக்கத் தடை செய்யப்பட்ட சிவப்பு மண்டலமாக (RED ZONE) அறிவிக்கப்பட்டுள்ளன. எனவே இந்த நாட்களில் அனுமதி இன்றி ட்ரோன்கள் இயக்குவது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. தவிர்க்க முடியாத காரணங்களுக்காக ட்ரோன்களை இயக்க வேண்டியவர்கள், சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் உரிய முன் அனுமதி பெற வேண்டும். இந்த உத்தரவை மீறுபவர்கள் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மதுரை மாநகர காவல்துறை சார்பில் தெரிவிக்கப்படுகிறது.