அரசு பள்ளிகளில் தேர்வுக் கட்டணம் வசூலிக்க தடை- பள்ளிக்கல்வித்துறை பரபரப்பு சுற்றறிக்கை

 
school

தமிழகம் முழுவதும் உள்ள அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளி மாணவர்களிடம் தேர்வுக் கட்டணம் வசூலிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. 

அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் ஆறு முதல் 12 -ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களிடம் தேர்வுக்கான வினாத்தாள் கட்டணம் மற்றும் எவ்வித முறையற்ற கட்டணங்களும் வசூலிக்கக்கூடாது என சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடியாக இடைக்காலத் தடை விதித்துள்ளது. இதையடுத்து தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குனர், உடனடியாக அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கும் பரபரப்பு உத்தரவை பிறப்பித்துள்ளார். 


அரசுப் பள்ளிகளில் ஆறு முதல் 12 -ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களிடம், குறிப்பாக 10 முதல் 14 வயதுக்குட்பட்ட கட்டாய இலவச கல்வி பெற தகுதியுடைய மாணவர்களிடம் (Article 21-A, RTE Act 2009) அங்கீகரிக்கப்படாத வினாத்தாள் கட்டணம் மற்றும் சட்டவிரோத கட்டணம் வசூலிப்பதை தடுக்க வேண்டும் என்று நீதிபதிகள் "There shall be an order of Interim injunction" - இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டனர். நீதிமன்ற உத்தரவை அடிப்படையாக வைத்து பள்ளிக்கல்வி இயக்குனர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் தெளிவாக கூறியுள்ளார். அதில் "மேற்கண்ட நீதிமன்ற இடைக்காலத் தடை ஆணைப்படி, அனைத்து அரசு / அரசு நிதியுதவி உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் VI முதல் XII வகுப்பு வரை பயிலும் மாணவர்களிடம் தேர்வுகளுக்கான வினாத்தாள் கட்டணம் மற்றும் எவ்வித முறையற்ற கட்டணங்கள் வசூலிக்கக்கூடாது என பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்திட அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்." குறிப்பிடப்பட்டுள்ளது.  

இதுவரை பல பள்ளிகளில் காலாண்டு, அரையாண்டு, மாதாந்திர தேர்வுகள் என்ற பெயரில் ரூ.50 முதல் ரூ.500 வரை வினாத்தாள் கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்ததாக புகார்கள் இருந்தன. இது RTE சட்டத்திற்கு எதிரானது. இந்த உத்தரவு மூலம் இனி தமிழகம் முழுவதும் உள்ள லட்சக்கணக்கான அரசுப் பள்ளி மாணவர்களிடம் ஒரு ரூபாய் கூட கட்டணம் வசூலிக்க முடியாது. மீறி வசூலித்தால் அது நீதிமன்ற அவமதிப்பு ஆகும்.