”ராமதாஸ் போர்த்திய மஞ்சள் துண்டோடு தான் தமிழக அரசியலில் கலைஞர் வலம் வந்தார்”- பாலு
கலைஞருக்கு மெரினாவில் இடம் கொடுக்க பரிந்துரைத்தவர் மருத்துவர் ராமதாஸ். ஆனால் அவருடைய சமூகத்துக்கு இட ஒதுக்கீடு வழங்க யோசித்தவர் மு.க.ஸ்டாலின் என வழக்கறிஞர் பாலு கூறினார்.

மாமல்லபுரம் அருகே பாமக பாமகவின் சித்திரை முழுநிலவு எழுச்சி மாநாடு வெகு கோலாகலமாக நடைபெற்றது. மாநாட்டில் பல்லாயிரக்கணக்கான பாமக தொண்டர்கள் பங்கேற்றனர். பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், சவுமியா அன்புமணி உள்ளிட்டோரும் பங்கேற்றனர். பாமக நிறுவனர் ராமதாஸ் மாநாட்டில் கொடி ஏற்றி வைத்தார். தொடர்ந்து பஹல்காம் தீவிரவாத தாக்குதலில் இறந்தவர்களுக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
மாநாட்டில் பேசிய வழக்கறிஞர் பாலு, “மெரினாவில் கலைஞரை அடக்கம் செய்ய இடம் பிடித்து கொடுத்தவர் ராமதாஸ். ராமதாஸ் போர்த்திய மஞ்சள் துண்டோடுதான் தமிழக அரசியலில் கலைஞர் வலம் வந்தார். ஆனால் முதல்வர் ஸ்டாலின் பாமகவின் இட ஒதுக்கீடு கோரிக்கையை திரும்பி பார்க்காமல் இருக்கிறார். நம் மாநாட்டை ஈசானி மூலையில் இருந்தபடி நம் மாவீரன் காடுவெட்டி குரு உற்சாகமாக பார்த்து மகிழ்ந்துகொண்டிருக்கிறார். சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து முதல்வர் சொல்வது தற்கொலைக்கு சமம்” என்றார்.


