ஒரே இரவில் திருடிய ஆட்டோவை அடையாளம் தெரியாததுபோல் மாற்றிய பலே கொள்ளையன்

 
ஆட்டோ ஆட்டோ

சின்னசேலம் பகுதியில் நூதன முறையில் ஆட்டோவை திருடிச் சென்று, ஒரே இரவில் திருடிய ஆட்டோவை அடையாளம் தெரியாமல் மாற்றிய பலே கொள்ளையன் கைது செய்யப்பட்டார்.


கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள ஆட்டோ ஸ்டாண்டில் ஆட்டோ வைத்து பிழைத்து வரும் சொக்கன் என்பவர் நேற்று காலை திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அருகே உள்ள பெருங்களத்தூர் கிராமத்தைச் சேர்ந்த அருண்குமார் என்பவர் சின்னசேலத்திற்கு வந்து சொக்கனிடம் வாடகைக்கு ஆட்டோ வேண்டும் என கேட்டுள்ளார். இதனையடுத்து சொக்கன் ஆட்டோவை எடுத்துக் கொண்டு சின்னசேலம் அருகே உள்ள நயினார்பாளையம் செல்லும் சாலையில் அமைந்துள்ள ரயில்வே கேட் அருகே அருண்குமாரை இறக்கிவிட்டு உள்ளார்.


ஆட்டோ கட்டணமாக 500 ரூபாய் கொடுத்ததால் சில்லரை வேண்டுமென கேட்டதற்கு சில்லரை இல்லை என கூறியதால் அருகில் உள்ள கடைக்குச் சென்று சொக்கன் சில்லரை மாற்ற சென்ற சமயத்தில் பயன்படுத்திக் கொண்ட அருண்குமார் ஆட்டோவில் சாவி இருந்த நிலையில் அந்த ஆட்டோவை அங்கிருந்து திருடி சென்றுள்ளார். இதனைக் கண்டு அதிர்ந்து போன சொக்கன் ஆட்டோவை தேடி பல்வேறு இடங்களில் தேடி அலைந்தும், ஆட்டோ கிடைக்காத நிலையில் இது தொடர்பாக சொக்கன் சின்னசேலம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் ஆட்டோ சென்ற வழித்தடங்களில் உள்ள சிசிடிவி கேமராக்களை இரவு முழுவதும் ஆராய்ந்து இறுதியாக இன்று சங்கராபுரம் பகுதியில் ஆட்டோவை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் திருட்டுப் போன ஆட்டோவை இரவோடு இரவாக அருண்குமார் ஸ்டிக்கர் ஒட்டி வாகனத்தை அடையாளம் தெரியாதது போல் மாற்றி உள்ளார். அதிலும் குறிப்பாக திமுக ஸ்டிக்கரை உரித்து விட்டு தமிழக வெற்றி கழகத்தின் ஸ்டிக்கரை ஒட்டி மேலும் பெரிய மாலை ஒன்றை வாங்கி போட்டு ஆட்டோவிற்கு பூஜையும் செய்துள்ளார்.

இந்த நிலையில் மண்டையில் உள்ள கொண்டையை மறந்தது போல் வகை வகையாக ஸ்டிக்கரை அடித்து திருட்டு வாகனத்தில் ஒட்டிய அருண்குமார் வாகனத்தின் பதிவு எண்ணை மாற்ற மறந்துவிட்டார் போலும்... இந்த நிலையில் வாகனத்தின் பதிவு எண் அடிப்படையில் திருடப்பட்ட வாகனத்தை பறிமுதல் செய்த சின்ன சேலம் போலீசார் இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட பலே திருடன் அருண்குமார் என்பவரை சின்னசேலம் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டு  தொடர்ந்து அவர் விசாரணைக்கு பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.