திமுக எம்பி கொலை வழக்கில் கார் டிரைவருக்கு ஜாமீன் மறுப்பு

 
m

திமுக முன்னாள் எம்பி மஸ்தான் கொலை வழக்கில் கார் டிரைவர் இம்ரான் பாஷாவின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்துள்ளது சென்னை உயர்நீதிமன்றம்.

 திமுக முன்னாள் எம்பி  மஸ்தான் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 22ஆம் தேதி அன்று கூடுவாஞ்சேரி அருகே நெருங்கிய உறவினரும் டிரைவருமான இம்ரான் பாஷாவுடன் காரில் சென்று கொண்டிருந்த போது திடீரென நெஞ்சு வலி , மூச்சுதிணறல் ஏற்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்ததாக கூறப்பட்டது . 

ma

 கூடுவாஞ்சேரி காவல் நிலையத்தில் சந்தேக மரணம் என்று வழக்கு பதிவு செய்யப்பட்டது.   இதை அடுத்து தனது தந்தை மஸ்தான் மரணத்தில் மர்மம் உள்ளது என்று அவரது மகன் டாக்டர் ஹரிஷ் அளித்த புகாரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.  இந்த விசாரணையில் மஸ்தான் நெஞ்சுவலி ஏற்பட்டு சாகவில்லை. திட்டமிட்டு செய்யப்பட்ட கொலை என்பது தெரிய வந்தது.

 இந்த கொலை வழக்கில் மஸ்தானின் தம்பி கவுஸ் ஆசாம் பாஷா,  கார் டிரைவர் இம்ரான் பாஷா உள்ளிட்ட ஐந்து பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர் .  இதில் கவுஸ் ஆசம் பாஷாவின் ஜாமீன் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது.  இந்த நிலையில் டிரைவர் இம்ரான் பாஷாவின் ஜாமின் மனுவையும் தள்ளுபடி செய்துள்ளது நீதிமன்றம்.

 இம்ரான் பாஷாவின் ஜாமின் மனு நீதிபதி தமிழ்ச்செல்வி முன்பு விசாரணைக்கு வந்தது.  அப்போது  காவல்துறை தரப்பில் மஸ்தான் மரணம் தொடர்பான விசாரணை ஆரம்பகட்ட நிலையில் இருக்கிறது .   அதனால் ஜாமீன் வழங்கக் கூடாது என்று எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.   இதனால் டிரைவர் இம்ரான் பாஷாவின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது சென்னை உயர்நீதிமன்றம்.