தவெக கொடி வழக்கில் திடீர் திருப்பம் - கடைசி நேரத்தில் வாபஸ் வாங்கிய பகுஜன் சமாஜ் கட்சி
தவெக கொடியில் யானை சின்னத்தை பயன்படுத்த இடைக்காலத் தடை கேட்டு பகுஜன் சமாஜ் கட்சி தொடர்ந்த வழக்கு வாபஸ் பெறப்பட்டது.

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில பொதுச் செயலாளரான பெரியார் அன்பன் என்ற இளங்கோவன் சென்னை பெருநகர முதலாவது உதவி உரிமையியல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், “அங்கீகரிக்கப்பட்ட தேசிய கட்சியான எங்களுக்கு யானை சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. எங்களுக்கான யானை சின்னத்தை வேறு எந்தக் கட்சியும் பயன்படுத்த முடியாது. இது தொடர்பாக தேர்தல் ஆணையத்திலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. எனவே, நடிகர் விஜய்யின் தவெக கொடியில் யானை சின்னத்தை பயன்படுத்தக் கூடாது என தடை விதிக்க வேண்டும்,” எனக் கோரியிருந்தார்.
இந்த வழக்கில் இன்று இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், இடைக்கால மனுவை திரும்ப பெற்றது பகுஜன் சமாஜ் கட்சி. பிரதான வழக்கை தொடர்ந்து நடத்த உள்ளதாக பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆனந்தன் நீதிமன்றத்தில் விளக்கம் அளித்தார். இடைக்கால உத்தரவு தங்களுக்கு எதிராக வந்தால், அதை சாதகமாக்கி கொள்வோம் எனக் கூறிய பகுஜன் சமாஜ், பெயர், சின்னத்தை வைத்து பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் கட்சி தொடங்கியதால் அவரையும் வழக்கில் சேர்க்க மனு தாக்கல் செய்ய உள்ளோம் என விளக்கம் அளித்துள்ளது.


