தீயாய் பரவிய வளைகாப்பு ரீல்ஸ்... ஆசிரியர் மீதான சஸ்பெண்ட் உத்தரவு ரத்து செய்ய நடவடிக்கை
வேலூரில் அரசு பள்ளியில் மாணவிகள் ரீல்ஸ் எடுத்து வெளியிட்ட விவகாரத்தில் ஆசிரியை பணியிடை நீக்கம் நீக்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
வேலூர் மாவட்டத்தில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி ஒன்றில் 12 - ம் வகுப்பு மாணவிகள் சிலர் சக மாணவிக்கு வளைகாப்பு நடத்துவது போன்று, இன்விடேஷன் கார்டை ரெடி பண்ணி, பள்ளியின் மேல் தளத்தில் வளைகாப்பு நடத்த தேவையான பொருட்களுடன் மாணவி ஒருவரை அமர வைத்து வளைகாப்பு நடத்துவது போன்று ரீல்ஸ் எடுத்து அதை சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளனர். இந்த வீடியோ இணையத்தில் தீயாய் பரவிய நிலையில் வகுப்பு ஆசிரியர் சாமுண்டீஸ்வரி சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
இந்நிலையில் மாணவிகள் செய்த தவறுக்கு வகுப்பு ஆசிரியர் சாமுண்டீஸ்வரி சஸ்பெண்ட் செய்யப்பட்டதை கண்டித்து ஆசிரியர்கள் சிஇஓ அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை அழைத்து பேசிய மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி, இந்தப் பிரச்சனைக்கு உடனடியாக தீர்வு காணப்படும் , ஆசிரியை பணியிடை நீக்கம் நீக்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் மாவட்டத்தில் இனிமேல் ஆசிரியர்கள் மீது ஏதாவது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றால் எனக்கு தெரியாமல் நடவடிக்கை எடுக்கப்படாது என்று உத்தரவாதம் அளித்ததால் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் அனைவரும் கலைந்து சென்றனர்.