பச்சிளம் ஆண் குழந்தை ரூ.3.5 லட்சத்துக்கு விற்பனை! தாய் உட்பட 4 பெண்கள் கைது

 
பச்சிளம் ஆண் குழந்தை ரூ.3.5 லட்சத்துக்கு விற்பனை

இராஜபாளையத்தில் பிறந்து ஒரு மாதமே ஆன ஆண் குழந்தையை விற்பனை செய்த தாய் உள்ளிட்ட நான்கு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ராஜபாளையம்: பச்சிளம் ஆண் குழந்தை ரூ.3.5 லட்சத்துக்கு விற்பனை - தாய் உட்பட 4  பெண்கள் கைது | Rajapalayam illegal adoption issue male infant sale for 3.5  lakh rupees - Vikatan

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே சேத்தூர் ஜீவா நகரை சேர்ந்த முனியசாமி- முத்து சுடலி தம்பதிக்கு ஏற்கனவே ஆறு வயதில் ஒரு குழந்தை இருக்கும் நிலையில் கடந்த 10 ஆம் தேதி அரசு மருத்துவமனையில்  இரண்டாவதாக ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளது. போதிய வருமானம் இன்றி தவித்த முத்து சுடலி இரண்டாவது குழந்தையை வளர்க்க இயலாமல் தனது தோழி முகவூரை சேர்ந்த ராஜேஸ்வரியிடம் யோசனை கேட்டுள்ளார்.

ராஜேஸ்வரியின் நண்பர் தென்காசி மாவட்டம் பெரும்பத்தூரை சேர்ந்த ஜெயபால் என்பவரின் ஆலோசனையின் படி ஈரோடு மாவட்டம் மாணிக்கப் பாளையத்தை சேர்ந்த தம்பிராஜ் என்பவரது மனைவி அசினாவிடம் ரூபாய் 3.5 லட்சம் பணம் பெற்றுக் கொண்டு முத்து சுடலி தனது குழந்தையை விற்பனை செய்துள்ளார். இதற்கு ஈரோட்டை சேர்ந்த ரேவதி என்பவர் உதவி செய்துள்ளார். குழந்தை விற்பனை செய்தது தொடர்பாக குழந்தைகள் பாதுகாப்பு மையத்திற்கு ரகசிய ரகசிய தகவல் கிடைத்துள்ளது. தகவலின் பெயரில் குழந்தைகள் நல பாதுகாப்பு மைய அதிகாரி திருப்பதி முத்து சுடலியிடம் விசாரணை மேற்கொண்டுள்ளார். அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து குழந்தைகள் மைய பாதுகாப்பு அதிகாரி சேத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரை பெற்றுக் கொண்ட காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து முத்து சுடலிடம் விசாரித்த போது குழந்தை விற்பனை செய்யப்பட்டது தெரியவந்தது. இதனை தொடர்ந்து ஈரோடு சென்ற காவல்துறையினர் அசினாவிடம் இருந்த குழந்தையை மீட்டு குழந்தைகள் பாதுகாப்பு மையத்தில் ஒப்படைத்தனர். அசீனாவிடம் நடத்தப்பட்ட விசாரணையில் ஏற்கனவே அவருக்கு இரண்டு திருமணமாகி நான்கு குழந்தைகள் இருப்பதும், இவரது தோழி ரேவதியுடன் சேர்ந்து பச்சிளம் குழந்தைகளை விலைக்கு வாங்கி விற்பனை செய்வதை தொழிலாக செய்து வருவதும் தெரிய வந்தது.

மேலும் இருவர் மீதும் ஏற்கனவே குழந்தை விற்பனை தொடர்பாக குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தற்போது அவர்கள் ஜாமீனில் வெளிவந்திருப்பதும் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக தற்போது நான்கு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் தப்பி ஓடிய ஜெயபாலை காவல்துறையினர் வலை வீசி தேடி வருகின்றனர்.