ஆழித்தேரோட்டம் : திருவாரூர் மாவட்டத்திற்கு ஏப்ரல் 1 முதல் உள்ளூர் விடுமுறை..

 
  ஆழித்தேரோட்டம்

ஆழித்தேரோட்டத்தையொட்டி திருவாரூர் மாவட்டத்திற்கு ஏப்ரல் 1ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

திருவாரூர் மாவட்டம்  தியாகராஜர் கோவில் சைவ சமயத்தின் தலைமை பீடமாகவும், சர்வதோஷ பரிகார தலமாகவும் விளங்குகிறது.  இத்தகைய சிறப்புமிக்க இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி உத்திர திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ஆழித்தேரோட்டம் நடைபெறும்.   அதன்படி இந்த ஆண்டுக்கான ஆழித்தேரோட்டம் அடுத்த மாதம் (ஏப்ரல்) 1-ந் தேதி நடைபெற உள்ளது. இதனையொட்டி  பங்குனி உத்திர பெருவிழா கடந்த 9-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதன்பின்னர் நாள்தோறும் பங்குனி உத்திர திருவிழா  உற்சவம், சாமி வீதி உலா ஆகியவை நடைபெற்று வருகிறது.

ஆழித்தேரோட்டம் : திருவாரூர் மாவட்டத்திற்கு ஏப்ரல் 1 முதல் உள்ளூர் விடுமுறை..

அதன்படி, வரும் நாட்களில்  16-ந் தேதி (வியாழக்கிழமை) முதல் 18-ந் தேதி வரை பக்தோற்சவம் எடியார் கூடும் திருவிழாவும், 19-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) கால பைரவர் திருவிழாவும், 20-ந் தேதி காட்சி கொடுத்த நாயனார் திருவிழாவும் நடக்கிறது.  பல்வேறு முக்கிய நிகழ்ச்சிகளுடனும் சந்திரசேகரர், அம்பாள், விநாயகர், முருகன், சண்டிகேஸ்வரர் வீதியுலா நடைபெறுகிறது.

இறுதியாக, திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான உலகப் பிரசித்தி பெற்ற திருவாரூர் ஆழித்தேரோட்டம் அடுத்த மாதம் (ஏப்ரல்) 1-ந் தேதி நடைபெறுகிறது.  இதனையொட்டி  திருவாரூர் மாவட்டத்திற்கு ஏப்ரல் 1-ம் தேதி உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த தேர் ஆசியாவிலேயே மிகப்பெரிய தேர் என்பது குறிப்பிடத்தக்கது.  அலங்கரிக்கப்பட்ட இந்த தேரின் மொத்த எடை 300 டன் என்றும்,  உயரம் 96 அடி என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இந்த தேரில் திருச்சி பெல் நிறுவனம் மூலம் நான்கு இரும்பு சக்கரங்களிலும் 'ஹைட்ராலிக் பிரேக்' பொருத்தப்பட்டுள்ளது.