‘தொழில் பெருக ஆயுத பூஜை.. வெற்றித் திருநாள் விஜயதசமி’ - தலைவர்கள் வாழ்த்து..

 
 ‘தொழில் பெருக ஆயுத பூஜை.. வெற்றித் திருநாள் விஜயதசமி’ -  தலைவர்கள் வாழ்த்து.. 

ஆயுத பூஜையையொட்டி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். 

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி :“உழைப்பின் உன்னதத்தை அனைவரும் அறிந்து, செய்யும் தொழிலை தெய்வமென மதித்து, அன்னை பராசக்தியின் அருளை வேண்டி, தொழில் சார்ந்த கருவிகளை தெய்வத்தின் திருவடிகளில் படைத்து வழிபடும் நாள் ஆயுத பூஜை திருநாள் ஆகும். விஜயதசமி நாளில் ஆரம்பிக்கும் அத்தனை காரியங்களும் வெற்றியில் முடியும் என்ற நம்பிக்கையில் மக்கள் அன்னை மகா சக்தியை வழிபட்டு நற்காரியங்களைத் தொடங்கும் வெற்றித் திருநாளே விஜயதசமி பண்டிகையாகும்.

மக்கள் அனைவரும் கல்வியிலும், செல்வத்திலும், துணிவிலும் சிறந்து விளங்கவும், அவர்களது வாழ்வில் வெற்றிகள் குவியவும் அருள் புரியுமாறு, உலகிற்கெல்லாம் தாயாக விளங்கும் அன்னை பராசக்தியைப் போற்றி வணங்கி அனைவருக்கும் ஆயுதபூஜை மற்றும் விஜயதசமி நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்., 

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஆயுத பூஜை வாழ்த்துகள்..!

தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை :“வாழ்வின் உயர்வுக்கு அடிப்படையான வீரம், கல்வி மற்றும் செல்வம் ஆகியவற்றை அருள வேண்டி, நவராத்திரி எனப்படும் 9 திருநாட்களின், முதல் 3 நாட்கள் வீரமிகு துர்காதேவியையும், அடுத்த 3 நாட்கள் செல்வம் பொழியும் லட்சுமி தேவியையும், நிறைவாக 3 நாட்கள் கல்வி தரும் சரஸ்வதி தேவியையும், மக்கள் பக்தியுடன் போற்றி வழிபடுவது நவராத்திரி விழாவின் சிறப்பு அம்சமாகும். 'செய்யும் தொழிலே தெய்வம்' என்பதை உணர்ந்து, மக்கள் தங்கள் தொழில் சார்ந்த கருவிகளை இறைபொருட்களாக பாவித்து, தொழில் பெருக அதற்கு பூஜை செய்து, வாழ்வில் வளம்பெற தெய்வத்தை வணங்கிடும் நன்னாள் 'ஆயுத பூஜை' திருநாளாகும்.

விஜயதசமி திருநாளன்று தொடங்கப்படும் செயல்கள் யாவும் வெற்றி பெறும் என்ற நம்பிக்கையுடன், மக்கள் தங்கள் குழந்தைகளுக்கு முதன்முதலாக கல்வியை தொடங்குதல், புதிய தொழில்களை ஆரம்பித்தல் போன்ற புதிய முயற்சிகளை துவக்கி, விஜயதசமி திருநாளை உற்சாகமாக கொண்டாடி மகிழ்வார்கள். ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி திருநாட்களை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் தமிழ்நாட்டு மக்கள் அனைவரும், வாழ்வில் வெற்றி பெற்று, நலமுடனும், வளமுடனும் வாழ்ந்திட எனது மனமார்ந்த நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.