"கொசு ஒழிப்பு பணியை தமிழ்நாடு முழுவதும் அரசு தீவிரப்படுத்துக" - தினகரன் வலியுறுத்தல்!!

 
ttv dhinakaran

தமிழ்நாடு முழுவதும் காய்ச்சல் முகாம்கள் நடத்துவதோடு, டெங்கு  தடுப்பு வழிமுறைகள் குறித்து பொதுமக்களிடையே போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில், தமிழ்நாட்டில் நடப்பாண்டில் 4048 பேருக்கும், செப்டம்பர் மாதத்தில் மட்டும் இதுவரை 300க்கும் அதிகமானோருக்கு டெங்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும், அதில் 3 பேர் உயிரிழந்திருப்பதாகவும் நாளிதழ்களில் வெளியாகி இருக்கும் செய்தி வேதனை அளிக்கக் கூடியதாக உள்ளது.

dengue

 டெங்கு காய்ச்சலை தடுக்க தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்படாத நிலையில், அதனை உருவாக்கும்  ஏடிஸ் கொசுவை ஒழிப்பது தான் ஒரே வழி என்பதை உணர்ந்து கொசு ஒழிப்பு பணியை தமிழ்நாடு முழுவதும் அரசு தீவிரப்படுத்த வேண்டும்.

 அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் காய்ச்சல் பாதிப்புடன் வருவோருக்கு டெங்கு பரிசோதனையை மேற்கொள்ள ஏதுவாக பரிசோதனை கருவிகளை அதிகரிக்க வேண்டும் எனவும்  டெங்கு உறுதி செய்யப்படுவோருக்கு உயர்தர சிகிச்சை அளிக்கும் வகையில்  தனி வார்டுகளை  உருவாக்கிட வேண்டுமென தமிழ்நாடு அரசை கேட்டுக்கொள்கிறேன்.

tn

 அதே நேரத்தில் மருத்துவமனைகளில் நிலவும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பற்றாக்குறையை கணக்கெடுத்து காலிப்பணியிடங்களை உடனடியாக  நிரப்புவதோடு அனைத்து மருத்துவமனைகளிலும் 24 மணி நேரமும் சுழற்சி அடிப்படையில் மருத்துவர்களும், செவிலியர்களும் பணியில் இருப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும்.

 மேலும் டெங்கு பாதிப்பில் இருந்து மக்களை மீட்க தமிழ்நாடு முழுவதும் காய்ச்சல் முகாம்கள் நடத்துவதோடு, டெங்கு  தடுப்பு வழிமுறைகள் குறித்து பொதுமக்களிடையே போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் எனவும் தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறேன்.என்று குறிப்பிட்டுள்ளார்.