தேவையற்ற பரிசோதனைகளைத் தவிர்க்க வேண்டும் :பத்மஸ்ரீ விருதுபெற்ற நாச்சியார்..!

 
1
அரவிந்த் கண் மருத்துவமனை இயக்குநரும் பிரபல கண் மருத்துவருமான ஜி.நாச்சியாரின் சேவையைப் பாராட்டி கடந்த 9ஆம் தேதி டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் அதிபர் திரௌபதி முர்மு அவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கினார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய நாச்சியார், “பத்மஸ்ரீ விருது எனது தனிப்பட்ட உழைப்பு, சேவைக்காக கிடைத்ததாக நான் கருதவில்லை. அரவிந்த் கண் மருத்துவமனை ஊழியர்கள், மருத்துவர்களின் பிரதிநிதியாகவே இவ்விருதைப் பெற்றுள்ளதாக நினைக்கிறேன்.

“1976ல் 11 படுக்கை வசதியுடன் தொடங்கப்பட்ட அரவிந்த் கண் மருத்துவமனை தற்போது தமிழகம் முழுவதும் 135 இடங்களில் அமைந்துள்ளது. இந்த மருத்துவமனைகளில் 6,000 ஊழியர்கள் பணிபுரிகிறோம். அவர்களில் 85% பேர் பெண்கள்.

“45% இலவசமாக சிகிச்சை அளிக்கிறோம். நாளொன்றுக்கு 15 ஆயிரம் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கிறோம். ஒவ்வொருவருக்கும் பார்வை கொடுக்கவேண்டும். அந்தப் பார்வை தரமானதாக இருக்க வேண்டும், எக்காரணம் கொண்டும் நன்கொடை வாங்கக்கூடாது என்பதை நோக்கமாகக் கொண்டு செயல்படுகிறோம்,” என்று அவர் மேலும் கூறினார்.

மேலும் அவசியம் இருந்தால் மட்டுமே ஸ்கேன், ஆய்வகப் பரிசோதனைகளைச் செய்யும்படி மருத்துவர்கள் நோயாளிகளிடம் பரிந்துரைக்கலாம், தேவையற்ற பரிசோதனைகளைத் தவிர்த்துவிடவேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளார் அரவிந்த் கண் மருத்துவமனை இயக்குநரும் பிரபல கண் மருத்துவருமான ஜி.நாச்சியார்.