மிடில் கிளாஸ் மக்களின் நம்பிக்கை- ஏவிஎம் ராஜேஸ்வரி திரையரங்கம் இடிப்பு
சென்னை ஆற்காடு சாலையில், 1970களில் ஏவிஎம் ஸ்டுடியோஸ் நிறுவனத்தால் கட்டப்பட்டது ஏவிஎம் ராஜேஸ்வரி திரையரங்கம். ஏ.வி மெய்யப்பன் செட்டியாரின் மனைவி ராஜேஸ்வரி நினைவாக இந்தத் திரையரங்கத்திற்கு அவர் பெயர் சூட்டப்பட்டது. இதனை அப்போதைய முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி திறந்து வைத்துள்ளார்.

ஏவிஎம் தயாரிப்பு நிறுவனத்தைப் போலவே ஏவிஎம் திரையரங்கம் வெகுஜன மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. மல்டிபிளக்ஸ் திரையரங்குகள் வரத் தொடங்கியதும், தனித் திரையரங்குகள் மிகப்பெரிய அளவில் பொருளாதார பாதிப்புகளை சந்தித்தது. இதனால் பல்வேறு தனித் திரையரங்குகள் மூடப்பட்டன. ஆண்டுகள் பல கடந்தும் டிக்கெட் விலைகள் உயர்த்தப்பட்ட போதிலும் தனது கடைசி நிமிடம் வரை குறைந்த அளவிலேயே டிக்கெட்டுகளை விற்பனை செய்து மிடில் கிளாஸ் மக்களின் நம்பிக்கை நட்சத்திரமாக ஏவிஎம் ராஜேஸ்வரி திரையரங்கம் திகழ்ந்தது. 1970 ல் பைசாவில் டிக்கெட் விற்பனையை தொடங்கிய ஏவிஎம், 2020 வரை குறைந்தபட்சம் 40 ரூபாய் முதல் அதிகபட்சம் 60 ரூபாய் வரையில் மட்டுமே டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டது.
சென்னையில் கொடிகட்டி பறந்த சாந்தி, கிருஷ்ணவேணி, பிராத்தனா, எஸ் எஸ் ஆர் பங்கஜம், அகஸ்தியா, உதயம், பழமை வாய்ந்த திரையரங்குகள் இந்த சிக்கலில் தவித்து தற்பொழுது அடுக்குமாடி குடியிருப்புகளாகவும் மாறி உள்ளது. அந்த வகையில் 50 ஆண்டுகளாக குறைந்த பட்ஜெட்டில் செயல்பட்டு வந்த ஏவிஎம் திரையரங்கத்தை தற்பொழுது இடிக்கும் பணிகள் தொடங்கியுள்ளது. 2020 ஆம் ஆண்டு கொரோனா பேரிடர் வர தொடங்கியதும் கட்டுப்பாடுகள் அடிப்படையில் ஏவிஎம் ராஜேஸ்வரி திரையரங்கம் மூடப்பட்டது. கொரோனாவிற்கு பிறகு எப்படியாவது மீண்டு வந்து விடும் என நினைத்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. ரசிகர்களின் வரத்து குறைவினாலும் , பல காட்சிகள் நஷ்டத்தில் திரையிடப்பட்டதாலும் பொருளாதார சிக்கலில் இத்திரையரங்கமும் மாட்டிக் கொண்டது. எனவே கடந்த 5 ஆண்டுகளாகவே இத்திரையரங்கம் மூடியே இருந்தது. ஏற்கனவே ஏவிஎம் வளாகத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள், மருத்துவமனைகள் கட்டப்பட்டு இயல்பான ஒரு இடம் போல் மாறி உள்ளது. இந்த நிலையில் ஏவிஎம் ராஜேஸ்வரி திரையரங்கம் இருந்த இடத்தில் பிரபல கட்டுமான நிறுவனம் இங்கு அடுக்குமாடி குடியிருப்புகளை கட்ட உள்ளது.

