அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நிறைவு.. 24 காளைகளை அடக்கி முதலிடம் பிடித்தவருக்கு கார் பரிசு...

 
ஜல்லிக்கட்டு போட்டி முதலிடம் பிடித்த கார்த்திக்


பொங்கல் திருநாளை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் நடைபெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி நிறைவு பெற்றது.

பொங்கல் பண்டிகையை ஒட்டி மதுரை மாவட்டத்தில் அவனியாபுரம், அலங்காநல்லூர், பால்மேடு பகுதிகளில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகள் உலக புகழ்பெற்றவை.  அந்தவகையில் இன்று பிரசித்திபெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு காலை 7 மணிக்கு தொடங்கியது.  பகல் முழுவதும் நடைபெற்ற இந்த  ஜல்லிக்கட்டு மாலை 5.10 மணிக்கு நிறைவு பெற்றது. மொத்தம் நடைபெற்ற 7 சுற்றுகளில்  641 காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன.

ஜல்லிக்கட்டு

ஒரு சுற்றுக்கு 50 வீரர்கள் வீதம் 300 மாடுபிடி வீரர்கள்  காளைகளை அடக்க களமிறக்கப்பட்டனர்.  இந்த அவனியாபுரம்  ஜல்லிக்கட்டில்  24 காளைகளை  அடக்கி அவனியாபுரத்தைச் சேர்ந்த கார்த்திக்  என்பவர் முதலிடம் பிடித்துள்ளார்.  அவரைத் தொடர்ந்து  19 காளைகளை அடக்கி வளையங்குளத்தைச் சேர்ந்த முருகன் 2-வது இடமும்  11 காளைகளை பிடித்து விளாங்குடியைச் சேர்ந்த பரத் என்பவர்  3 -வது இடமும் பிடித்துள்ளனர்.

கார்த்திக்  ஜல்லிக்கட்டு

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் முதல் மூன்று இடங்களை பெரும் சிறந்த வீரர்கள் மற்றும் சிறந்த காளைகளுக்கு மாவட்ட நிர்வாகத்தால்  வெற்றி சான்றிதழ்களும்,  கோப்பைகளும் வழங்கப்பட்டன.   மேலும் சிறந்த மாடுபிடி வீரருக்கு முதல்வர் சார்பாக காரும், சிறந்த காளைக்கு சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் சார்பாக இருசக்கர வாகனம் வழங்கப்பட உள்ளது. இதேபோல் காளைகளை அடக்கிய வீரர்களுக்கு தங்கம், வெள்ளி, மிக்ஸி, கிரைண்டர், டிவி உள்ளிட்ட பல்வேறு பரிசு பொருட்கள் வழங்கப்பட்ட்ன.

ஜல்லிக்கட்டு போட்டியில் முதல் 3 இடம் பிடித்தவர்கள்