அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி நிறைவு- காரை தட்டிச்சென்ற கார்த்தி

 
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி நிறைவு- காரை தட்டிச்சென்ற கார்த்தி

மதுரை அவனியாபுரத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி நிறைவு பெற்றது. இப்போட்டியில் 10 சுற்றுகள் விறுவிறுப்பாக நடைபெற்றன.

மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் 817 காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன. மேலும் 400 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர். சிறந்த காளை மற்றும் மாடுபிடி வீரருக்கு முதலமைச்சர் சார்பில் தலா ஒரு கார் பரிசாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் 17 காளைகளை அடக்கிய அவனியாபுரம் கார்த்திக் முதலிடம் பிடித்துள்ளார். கடந்த 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியிலும் கார்த்திக் முதல் பரிசு வென்றார். அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் 17 காளைகளை அடக்கியதன் மூலம் கார்த்திக் கடந்தாண்டு சாதனையை சமன் செய்தார்.

கடந்தாண்டு நடந்த ஜல்லிக்கட்டில் 17 காளைகளை அடக்கி இருசக்கர வாகனத்தை பரிசாக கார்த்திக் வென்றிருந்தார். 13 காளைகளை அடக்கி ரஞ்சித்குமார் இரண்டாவது இடத்தையும், 9 காளைகளை அடக்கி முரளிதரன் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளனர். அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் தலைமை காவலர், சார்பு ஆய்வாளர் உட்பட 48 பேர் காயமடைந்தனர். மாடுபிடி வீரர்கள் 19, காளை உரிமையாளர்கள் 25, பார்வையாளர்கள் 2, காவலர்கள் 2 பேர் என மொத்தம் 48 பேர் காயமடைந்தனர். இதில் 9 பேர் மேல் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவனியாபுரத்தை சேர்ந்த ஜி.ஆர்.கார்த்திக் என்பவரின் காளை சிறந்த காளையாக தேர்வு செய்யப்பட்டு கார் பரிசாக வழங்கப்பட்டது.

மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்ற காளை ஒன்றுக்கு காலில் காயமடைந்தது. காயமடைந்த காளை ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டடது. இதனால் போட்டி 10 நிமிடங்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.