திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆவணித் திருவிழா கொடியேற்றம்!!
திருச்செந்தூரில் ஆவணிதிருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆவணித் திருவிழா கொடியேற்றம் கோலாகலமாக தொடங்கியது.அதிகாலை 5.20 மணிக்கு ஆவணி திருவிழாவுக்கான கொடியானது கொடி மரத்தில் ஏற்றப்பட்டது. கொடி மரத்திற்கு பால், மஞ்சள், பன்னீர் உள்ளிட்ட 16 வகை மங்கல பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்ட நிலையில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். ஆவணித் திருவிழா கொடியேற்றத்தையொட்டி திருச்செந்தூரில் 600-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருத்தலம் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இங்கு தினசரி ஆயிரக்கணக்கான மக்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர். திருச்செந்தூரில் ஆவணி திருவிழா ஆண்டுதோறும் மிகச் சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம்.
12 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் தினந்தோறும் காலை, மாலை என சுவாமி மற்றும் அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர். வருகிற 8ம் தேதி இரவு 7:30 மணிக்கு மேல கோவிலில் சுவாமி அம்பாளுக்கு குடவருவாயில் தீபாரதனை நடைபெறுகிறது. இதை தொடர்ந்து சுவாமி மற்றும் அம்பாள் இருவரும் தனித்தனியே தங்கமயில் வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர். நிகழ்ச்சியின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் வருகிற 13-ஆம் தேதி காலை 6 மணிக்கு நடைபெற உள்ளது.