இனி ஆட்டோ குறைந்தபட்சக் கட்டணம் ₹60? அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் ஆகஸ்ட் 28 முதல் போராட்டம்!

 
AUTO

அனைத்து ஆட்டோ தொழிற்சங்க கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் எஸ் பாலசுப்பிரமணியன், செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், கடந்த 13 ஆண்டுகளாக மீட்டர் கட்டணம் உயர்த்தப்படவில்லை. இதனால் ஆட்டோ ஓட்டுநர்களின் வருமானமும் உயரவில்லை. பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகிறோம்.

தற்போது 14 ஆம் ஆண்டும் தொடங்கியுள்ளது. விலைவாசிக்கு ஏற்ப மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. மேலும் அனைத்து பொருட்களின் விலை உயர்ந்ததால், மீட்டர் கட்டணம் மாற்றி அமைக்க வேண்டும் என மாநில அரசுக்கு உத்தரவிட்டது.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய மோட்டார் வாகன சட்டத்தை அமல்படுத்தி, ஆன்லைன் அபராதம் என்ற பெயரால் ஆட்டோ தொழிலாளர்களின் வயிற்றில் அடிக்கின்றனர்.

மேலும், 1.5 கிலோ மீட்டருக்கு 60 ரூபாயும், மேலும் ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் 30 ரூபாயும் கட்டணமாக நிர்ணயிக்கப்பட வேண்டும். காத்திருப்பு கட்டணம் மற்றும் இரவு நேர பயணம் கட்டணம் நிர்ணயிக்க வேண்டும் என அனைத்து கூட்டமைப்புகள் சார்பில் அமைச்சரிடம் மனுக்களும் வழங்கப்பட்டன.

அனைத்து கட்சியின் தலைவர்கள் மற்றும் அனைத்து தொழிற்சங்க தலைவர்கள் சந்தித்து மனுக்களை கொடுத்துள்ளோம். எங்களின் கோரிக்கைகளுக்கு முதலமைச்சரும், போக்குவரத்து துறை அமைச்சரும் சரியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

5 லட்சம் குடும்பத்தினர் ஆட்டோ தொழிலை நம்பி வாழ்வாதாரத்தை நடத்தி வருகின்றனர். இதனால் அரசு, டூவீலர் பைக் டாக்ஸியை முறைப்படுத்த வேண்டும், முறைப்படுத்துவதற்கு முன்பாக தற்போதுள்ள சட்டத்தின்படி தடை செய்ய வேண்டும். இது குறித்து மனுக்களை போக்குவரத்து ஆணையர், போக்குவரத்து அமைச்சர் மற்றும் முதலமைச்சரிடம் கொண்டு சென்றுள்ளோம்.

வரும் 28ஆம் தேதி நடைபெறும் போக்குவரத்து மானிய கோரிக்கைகளில், இது குறித்த அறிவிப்பு வெளியாக வேண்டும். இல்லாவிட்டால் பெரிய அளவில் அனைத்து சங்கம் சார்பில் போராட்டம் நடத்தப்படும் என்றார்.