”நீட் தேர்வில் 502 மார்க் எடுத்தும் சீட் கிடைக்காது”- ஆட்டோ ஓட்டுநர் மகள் தற்கொலை
காஞ்சிபுரத்தில் நீட் தேர்வில் 502 மார்க் எடுத்து தேர்வில் வெற்றி பெற்ற ஆட்டோ ஓட்டுனரின் மகள் சமீமா என்பவர் மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்காதோ என்ற பயத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட திருகாளி மேடு காமராஜர் தெருவை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் சாதிக் என்பவரின் மகள் சமீமா வயது 18 என்பவர் பிளஸ் டூ முடித்துவிட்டு இரண்டாவது முறையாக நீட் தேர்வு எழுதி அதில் 502 மார்க் எடுத்து வெற்றி பெற்று உள்ளார். நீட் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு வருகின்ற 30 ஆம் தேதி தான் கவுன்சிலிங் தொடங்க உள்ளது. இரண்டொரு நாளில் சமீமாவிற்கு கவுன்சிலிங் அழைக்க வாய்ப்பு உள்ள நிலையில், தமக்கு அரசு மருத்துவ கல்லூரியில் இடம் கிடைக்குமோ கிடைக்காதோ என்ற பயத்தில் வீட்டிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சமீமாவின் சடலத்தை காவல்துறைக்கு தெரியாமல் மூடி மறைக்க உறவினர்கள் முயற்சித்துள்ளனர். தாலுகா காவல்துறையினருக்கு தகவல் கிடைத்ததின் பேரில் சமீமா அவர்களின் சடலத்தை காவல்துறையினர் கைப்பற்றி காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் பிரோத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மிகவும் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த சமீமா தனக்கு மருத்துவக் கல்லூரியில் இலவச இடம் கிடைக்காதோ என்ற பயத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் மிகுந்த சோகத்தை உண்டாக்கியது.


