வெளியான பரபரப்பு ஆடியோ : பாஜகவை விட்டு விடுங்கள் திமுகவை டார்கெட் செய்யுங்கள்..!

 
1

 நாம் தமிழர் கட்சியை சேர்ந்த சாட்டை துரைமுருகன் பேசும் பரபரப்பான ஆடியோ வெளியிடப்பட்டுள்ளது.

இந்த ஆடியோ லீக்கை தனது எக்ஸ் பக்கத்தில் சாட்டை துரைமுருகனுடன் தொலைபேசியில் உரையாடிய பாஜகவை சேர்ந்த திருச்சி சூர்யா வெளியிட்டுள்ளார். சின்னம் கைவிட்டு போனது குறித்து சீமான் பெரிதாக கவலைப்படவில்லை. இதற்கு பிஜேபி காரணம் இல்லை எனவும் ஆடியோவில் பேசியுள்ளார். இந்த ஆடியோ மூலம் சீமான் திமுக எதிர்ப்பை மட்டுமே பிரதானமாக கொண்டுள்ளார் என்பது வெட்ட வெளிச்சத்திற்கு வந்துள்ளது என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

அந்த வீடியோவில், அண்ணாமலை குறித்து சாட்டை துரைமுருகன் பேசிய வீடியோவை நீக்குமாறு கேட்டுக்கொண்ட திருச்சி சூர்யா, இனிமேல் அதுபோன்று வீடியோக்களை வெளியிட வேண்டாம் என கேட்டுக்கொண்டார்.

அதற்கு பதில் கூறிய சாட்டை துரைமுருகன், 'இனிமே பாஜகவை எதிர்த்து வீடியோ வெளியிட மாட்டேன், அண்ணனே சொல்லிவிட்டார், முழு டார்கெட்டும் திமுகதான் என்று. ஆகையால் இதை விட்டுவிடுங்கள். இனிமே பார்த்துக்கொள்கிறேன். 100 விழுக்காடு உறுதியாக இனி அப்படி வீடியோ வராது' என கூறியிருந்தார். மேலும் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள சின்னத்தை மாற்றி கேட்க உள்ளதாகவும் தெரிவித்தார்.

சாட்டை துரைமுருகனோடு பேசிய இந்த ஆடியோவை திருச்சி சூர்யா தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதனால் கடுப்பான சாட்டை துரைமுருகன் , திருச்சி சூர்யாவை கடுமையாக விமர்சித்து தனது டிவீட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் குறிப்பிட்டிருப்பதாவது, 'ஆடியோல என்னடா சொல்றது இங்கேயே சொல்றேன். எங்கள் இனத்தை கொன்றொழிக்க காரணாமாக இருந்த காங்கிரசும் துணை நின்ற திமுகவும் எங்கள் முதல் எதிரிகள் ! அவர்களை வேரோடும் வேரடி மண்ணோடும் ஒழித்துக் கட்டவே நாம்தமிழர் கட்சி துவங்கப்பட்டது ! 

பாஜக மனித குலத்திற்கு ஆபத்து அண்ணாமலை போன்றவர்கள் தமிழ்நாட்டு அரசியலுக்கே பேராபத்து என்பதை சொல்லி காணொளி போட்டதற்கு காலில் விழாத குறையாக கெஞ்சி கோரிக்கை வைப்பது போல் அலைபேசி உரையாடலை பதிவு செய்து போடுவதெல்லாம் சில்லரைத்தனத்தின் உச்சம் ! இதுக்காகவே கோவையில் தங்கியிருந்து அண்ணாமலை போன்றவர்களை காலி செய்வோம் !' என குறிப்பிட்டுள்ளார்.