ரயில் பயணிகள் கவனத்திற்கு..! இனி இந்த எக்ஸ்பிரஸ் ரயில் கடம்பூர் ரெயில் நிலையத்தில் நின்று செல்லும்: தெற்கு ரெயில்வே..!
குருவாயூர்-சென்னை விரைவு ரெயில் வருகிற 31ம் தேதி (வெள்ளிக்கிழமை) முதல் கடம்பூர், வாஞ்சி மணியாச்சி ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும் என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
தெற்கு ரெயில்வே அறிவித்துள்ள அறிவிப்பில், "தினமும் சென்னையில் இருந்து வரும் குருவாயூர்-சென்னை விரைவு ரெயில் (வண்டி எண்: 16127-16128) இரவு 7.53 மணிக்கு கோவில்பட்டிக்கு வந்து 7.55 மணிக்கு புறப்பட்டு செல்லும். அங்கிருந்து கடம்பூருக்கு இரவு 8.07 மணிக்கு சென்று, இரவு 8.08 மணிக்கு புறப்படும். அங்கிருந்து புறப்பட்டு செல்லும் ரெயில் இரவு 8.18 மணிக்கு வாஞ்சி மணியாச்சிக்கு சென்று, இரவு 8.20 மணிக்கு புறப்பட்டு செல்லும்.
அதே போல், மறுமார்க்கத்தில் குருவாயூரில் இருந்து சென்னை செல்லும் விரைவு ரெயில் (16128) தினமும் காலை 9.28 மணிக்கு வாஞ்சி மணியாச்சி ரெயில் நிலையத்துக்கு வந்து காலை 9.30 மணிக்கு புறப்பட்டு, அங்கிருந்து 9.39 மணிக்கு கடம்பூர் சென்று, காலை 9.40 மணிக்கு புறப்பட்டு, காலை 9.56 மணிக்கு கோவில்பட்டி சென்றடையும். அங்கிருந்து காலை 9.58 மணிக்கு புறப்பட்டு சென்னைக்கு செல்லும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடம்பூர், வாஞ்சி மணியாச்சி ரெயில் நிலையங்களில் குருவாயூர் விரைவு ரெயில் நிற்கும் என்ற அறிவிப்புக்கு சுற்றுவட்டார பொதுமக்கள், வியாபாரிகள் உள்பட அனைத்து தரப்பினரும் வரவேற்று, மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். கடம்பூரில் சென்னை-குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயில் நின்று செல்வதற்கு நடவடிக்கை எடுத்த மத்திய ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவிற்கு கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. தொகுதி மக்கள் சார்பில் நன்றி தெரிவித்தார்.


