ரயில் பயணிகள் கவனத்திற்கு..! இனி 20 ரூபாய்க்கு தரமான உணவு..!

 
1
பெரும்பாலும் ரயில் பயணிகளுக்கு அதிலும் தொலைதூர பயணிகளுக்கு மிகுந்த சிக்கலை தருவது உணவுதான்.. அதுவும் தொலை தூர ரயில்களில், மாலையில் ரயில் ஏறினால் மறுநாள்தான் மதியம், மாலை நேரங்களில் இறங்க வேண்டிவரும்.. அதேபோல 2 நாட்கள், 3 நாட்கள் ரயிலில் பயணம் செய்ய வேண்டியிருக்கும்.

இதில் ரிசர்வ் செய்யப்படாத பெட்டிகளில் பயணிப்பவர்கள் பெரும்பாலும் சாமானிய மக்கள்தான்.. எனவே இவர்களுக்கு உணவு என்பது மலிவு விலையில் கிடைப்பதில்லை..ஆனால், இப்படி வாங்கி சாப்பிடும் அளவுக்கு, விலை மலிவாக இருப்பதில்லை.. விற்கப்படும் உணவும் தரமற்று இருப்பதாக புகார்கள் எழுவது வாடிக்கையாகிவிட்டது.. எனவேதான், 20 ரூபாய்க்கு உணவு என்ற திட்டத்தை ரயில்வே கொண்டுவந்துள்ளது.

அதாவது, பொதுப்பெட்டிகள் நிற்கும் இடத்தில், பிளாட்பாரத்தில் கவுண்ட்டர்கள் அமைக்கப்பட்டு, அங்கு ரூ. 20 ரூபாய்க்கு மீல்ஸை வழங்குவது என முடிவு செய்யப்பட்டது.. இந்த 20 ரூபாய்க்கு ஆலு பூரி, சாதம், பாவ்-பாஜி, மசாலா தோசை, கிச்சடி, சோலே குல்சே/பத்தூரே போன்ற உணவு வகைகள் விற்பனை செய்யப்படுகிறது.. மலிவு விலையில் குடிநீரும் வழங்கப்படுகிறது.

இந்நிலையில், தெற்கு ரெயில்வே மீண்டும் ஒரு செய்திக்குறிப்பை வெளியிட்டிருக்கிறது.. அதில், "தெற்கு ரெயில்வேயின் சென்னை கோட்டம், ஐ.ஆர்.சி.டி.சி.யுடன் இணைந்து முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளில் பயணிக்கும் பயணிகளின் வசதிக்காக கடந்த 2023ம் ஆண்டு ரூ.20-க்கு "சிக்கன உணவு" என்ற திட்டம் தொடங்கப்பட்டது. இந்த "சிக்கன உணவு" திட்டத்தின் நோக்கம் பயணிகளுக்கு சத்தான மற்றும் குறைந்த விலை உணவுகளை வழங்குவதாகும். இந்த திட்டம் குறித்து பல பயணிகளுக்கு இன்றளவும் தெரிவதில்லை.

அதனால் சென்னை சென்டிரல், எழும்பூர், செங்கல்பட்டு, அரக்கோணம், காட்பாடி ஆகிய ரெயில் நிலையங்களில் சிக்கன உணவு விற்பனை மையங்கள் கட்டாயம் வைத்திருக்க வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், 27 ரெயில் நிலையங்களில் 64 சிக்கன உணவு கடைகள் செயல்பட்டு வருகிறது. இந்த மையங்கள் முன்பதிவு செய்யப்படாத பெட்டிகள் வந்து நிற்கும் இடத்தில் வைத்து பயணிகளுக்கு நேரடியாக உணவு வழங்குகின்றன. இந்த கடைகளில் 200 கிராம் எடையுள்ள எலுமிச்சை சாதம், தயிர் சாதம், புளி சாதம், பருப்பு கிச்சடி மற்றும் பூரி-கிழங்கு போன்ற அரிசி வகை உணவுகள் விற்பனை செய்யப்படுகிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.