பொதுமக்கள் கவனத்திற்கு! இன்று முதல் தொடங்கும் ஆன்லைன் 'சுய கணக்கெடுப்பு' – விபரங்களை பதிவேற்றம் செய்வது எப்படி?
''மக்கள்தொகை கணக்கெடுப்புடன், ஜாதிவாரி கணக்கெடுப்பும் நடத்தப்படும்,'' என, மக்கள் தொகை கணக்கெடுப்புக்கான தமிழ்நாடு இயக்குநர் சுந்தரேஷ் பாபு தெரிவித்தார்.
அவர் அளித்த பேட்டி: நாட்டில் முதல் மக்கள்தொகை கணக்கெடுப்பு, 1872ம் ஆண்டில் நடத்தப்பட்டது. அதன் பின், நாடு முழுவதும், 1881ம் ஆண்டு கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. கடைசியாக, கடந்த 2011ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பு நடந்தது. அதன் தொடர்ச்சியாக, 2021ம் ஆண்டு, கணக்கெடுப்பு நடத்த ஆயத்த பணிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், கொரோனா பரவல் காரணமாக, அந்த பணிகள் ரத்து செய்யப்பட்டன.இந்நிலையில், 16 ஆண்டுகளுக்கு பின், அடுத்த ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைபெற உள்ளது.
முதல்முறையாக, 'டிஜிட்டல்' வழியாக நடத்தப்படுகிறது. மக்கள் தொகை கணக்கெடுப்பானது, 'வீடு விபர பட்டியல் மற்றும் வீடுகள் கணக்கெடுப்பு' மற்றும் 'மக்கள்தொகை கணக்கெடுப்பு' என, இரு கட்டங்களாக நடத்தப்படும். அந்த வகையில், வரும் ஆகஸ்ட் 1 முதல் 30ம் தேதி வரை, வசிக்கும் வீடு பற்றிய விபரங்களை சேகரிக்கும் பட்டியல் மற்றும் வீடுகள் எத்தனை என்ற கணக்கெடுப்பு பணி நடக்கும். அதற்கு முன், சுய கணக்கெடுப்பு பணி, இன்று தொடங்கும். பொது மக்கள், https://se.census.gov.inஎன்ற இணையதளத்தில், தங்களின் சுய விபரங்களை பதிவேற்றம் செய்யலாம். 16 மொழிகளில் பதிவேற்றம் செய்ய வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. இந்தப் பணிகள், வரும் 31ம் தேதி வரை நடக்கின்றன.
சுய கணக்கெடுப்பு பதிவேற்றத்துக்கு பின், ஒரு அடையாள எண் உருவாக்கப்படும்.அதை பொதுமக்கள் பத்திரமாக வைத்திருக்க வேண்டும். இந்த கணக்கெடுப்பின் போது, வீடுகளின் நிலை, குடிநீர் வசதி, சுகாதாரம், மின்சாரம், இணைய வசதி, சமையல் எரிபொருள் வசதி, வாகனங்கள், உணவு முறை உட்பட, 33 கேள்விகள் கேட்கப்படும். இது, தேசிய, மாநில, உள்ளாட்சி அமைப்புகளின் திட்டமிடலுக்கு அடித்தளமாக அமையும்.வீடு விபர பட்டியல் மற்றும் வீடுகள் கணக்கெடுப்பு பணிகளுக்கு பின், 2027 பிப்ரவரி மாதம், நாடு முழுதும் ஒரே கட்டமாக மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி நடக்கும். அதனுடன் ஜாதிவாரி கணக்கெடுப்பு பணிகளும் நடக்கும் என, மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதில், கேட்கப்படும் கேள்விகள் விரைவில் இறுதி செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

