பொதுமக்கள் கவனத்திற்கு..! வரும் 21ம் தேதி கோயம்பேடு மார்க்கெட் இயங்காது..!
கோயம்பேடு மார்க்கெட்டில் உள்ள வியாபாரிகள் தீபாவளி கொண்டாடும் வகையில் தீபாவளிக்கு அடுத்த நாள் அக்டோபர் 21ஆம் தேதி செவ்வாய் அன்று அதிகாலை முதல் மாலை 6 மணி வரை விடுமுறை விடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுபற்றி கோயம்பேடு சிறு மொத்த காய்கறி வியாபாரிகள் நலச் சங்கத்தின் தலைவர் எஸ்.எஸ்.முத்துக்குமார் கூறுகையில், அக்டோபர் 20 தீபாவளி பண்டிகையை ஒட்டி சங்கம் சார்பில் வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறோம். நாங்கள் பண்டிகையை கொண்டாடும் வகையில் விடுமுறை ஏற்பாட்டை செய்துள்ளோம். இதற்கு பொதுமக்கள் போதிய ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.
தீபாவளி பண்டிகை வருகிற 20-ந் தேதி (திங்கட்கிழமை) கொண்டாடப்படுகிறது. கோயம்பேடு மார்க்கெட்டில் தங்கி வேலை பார்த்து வரும் வெளி மாவட்டத்தை சேர்ந்த ஊழியர்கள் மற்றும் கூலி தொழிலாளர்கள் பண்டிகையை கொண்டாட சொந்த ஊர் செல்ல உள்ளனர். இதேபோல் விவசாய தொழிலாளர்களும் விடுமுறை அறிவித்து உள்ளனர். மார்க்கெட்டுக்கு வருகிற 21-ந் தேதி விடுமுறை விடப்படுவதாக காய்கறி மொத்த வியாபாரிகள் சங்கத்தினர் அறிவித்து உள்ளனர். 22-ந் தேதி அதிகாலை முதல் வழக்கம் போல் சந்தை செயல்படும். அதேநேரம் மளிகை, பழம் மற்றும் பூமார்க்கெட் வழக்கம் போல செயல்படும் என்று அதன் வியாபாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


