சென்னை மக்கள் கவனத்திற்கு..! 45 நாட்களுக்கு மின்சார ரயில் சேவையில் மாற்றம்..!
தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்ட மேலாளர் சைலேந்திர சிங் நேற்று கூறியதாவது: சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் மேற்கொள்ளப்படும் மறுசீரமைப்பு பணிகள் காரணமாக, நடைமேடை 10 மற்றும் 11-ல் இருந்து இயக்கப்படும் புறநகர் மின்சார ரயில்கள் வரும் 20-ம் தேதி நள்ளிரவு முதல் ஏப். 5-ம் தேதி நள்ளிரவு வரை நடைமேடை 5 மற்றும் 6-ல் இருந்து இயக்கப்படும்.
சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம் மற்றும் செங்கல்பட்டுக்கு இயக்கப்படும் புறநகர் மின்சார விரைவு ரயில்கள் 6-வது நடைமேடையிலும், செங்கல்பட்டு, தாம்பரத்தில் இருந்து கடற்கரை வரை இயக்கப்படும் மின்சார ரயில்கள் 5-வது நடைமேடையிலும் இயக்கப்படும். இந்த 45 நாட்களிலும் தற்காலிக அட்டவணைப்படி மட்டுமே மின்சார ரயில்கள் இயக்கப்படும்.
புதிய எண்கள் மற்றும் கால அட்டவணையுடன் 160 மின்சார ரயில்கள் இயக்கப்படும். 80 ரயில்கள் சென்னை கடற்கரையில் இருந்தும், 80 ரயில்கள் செங்கல்பட்டு, தாம்பரத்தில் இருந்தும் இரு மார்க்கமும் இயக்கப்படவுள்ளன.
வேளச்சேரி- பரங்கிமலை பறக்கும் ரயில் தடத்தில் பாதுகாப்பு சோதனை முடிந்த பிறகு, மார்ச் இறுதியில் ரயில் சேவை தொடங்கும். கிளாம்பாக்கம் ரயில் நிலையம் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு விரைவில் திறக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
ரயில்கள் ரத்து செய்வது குறித்து, ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: புறநகர் மின்சார ரயில் சேவைகளின் புதிய அட்டவணையின்படி, தற்போது இயக்கப்படும் 204 ரயில் சேவைகளுக்குப் பதிலாக மொத்தம் 160 ரயில் சேவைகள் இருமார்க்கமாக இயக்கப்படும்.
செங்கல்பட்டு மற்றும் தாம்பரம் முதல் கடற்கரை வரை மொத்தம் 67 ரயில் சேவைகள் இயக்கப்படும். எழும்பூர் நிலையத்திலேயே 11 ரயில் சேவைகள் நிறுத்தப்படும். புறநகர் சேவைகள் குறைக்கப்பட்டதால் பாதிக்கப்பட்ட பயணி களுக்கு உதவும் வகையில், தெற்குரயில்வே, சிறப்பு சேவைகளை இயக்க பெருநகர போக்குவரத்துக் கழகத்திடம் கோரிக்கை விடுக்கப்பட உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

