சென்னைவாசிகள் கவனத்திற்கு..! தெருநாய்களுக்காக பிரத்யேக இணையதள சேவை தொடக்கம்..!

 
1 1

இந்தியாவிலேயே முதன்முறையாக பெருநகர சென்னை மாநகராட்சியில் மைக்ரோசிப் செலுத்துதல், உரிமம் வழங்குதல் உள்ளிட்ட ஒருங்கிணைந்த மேலாண்மைக்காக மேம்படுத்தப்பட்ட பெருநகர சென்னை மாநகராட்சியின் இணையதள சேவையினை மேயர் பிரியா தொடங்கி வைத்தார்.

மேயர் ஆர்.பிரியா பேசியதாவது:-

பெருநகர சென்னை மாநகராட்சியில் செல்லப்பிராணிகள் வளர்ப்பினை முறைப்படுத்த கடந்த 2023 ஆகஸ்ட் மாதம் முதல் பெருநகர சென்னை மாநகராட்சி இணையதளம் வாயிலாக செல்லப்பிராணி உரிமம் பெறும் முறை நடைமுறையில் உள்ளது.செல்லப்பிராணிகளின் உரிமையாளர் தங்களின் புகைப்படம், முகவரிச் சான்று, செல்லப்பிராணி புகைப்படம் மற்றும் வெறிநாய்க்கடிநோய் தடுப்பூசி செலுத்தப்பட்ட சான்றிதழ் ஆகியவற்றை பதிவேற்றம் செய்து ரூ.50/-ஐ உரிமக் கட்டணமாக செலுத்தி உரிமம் பெற்று வருகின்றனர். கடந்த 2024 ம் ஆண்டு முதல் 2025 - செப்டம்பர் மாதம் வரை 12,393 உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் செல்லப்பிராணிக்களுக்கான உரிமம் பெறும் நடைமுறையை மேலும் விரைவுபடுத்தவும், இதன்மூலம் செல்லப்பிராணிகளின் உரிமையாளர்கள் எளிதாக தங்கள் செல்லப்பிராணிகளுக்கான உரிமத்தை பெற்றுக்கொள்வதற்காகவும் இந்தியாவிலேயே முதன்முறையாக பெருநகர சென்னை மாநகராட்சியில் மைக்ரோசிப் செலுத்துதல், உரிமம் வழங்குதல் உள்ளிட்ட மேம்படுத்தப்பட்ட இணையதள சேவை (www.chennaicorporation.gov.in-ல் Pet Animal Licence) தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

செல்லப்பிராணி உரிமம் பெறுவதற்கான நிபந்தனைகள்:

பெருநகர சென்னை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள எந்தவொரு சாலை/தெரு/சாக்கடையிலும் தனது நாய்/செல்லப்பிராணியை கழிவு ஏற்படுத்த எந்த உரிமையாளரோ அல்லது நாயின் பொறுப்பாளரோ அனுமதிக்கக் கூடாது. ஏதேனும் நாய் சாலை/ தெரு/ சாக்கடையில் கழிவு ஏற்படுத்துவதை சுத்தம் செய்து முறையாக அப்புறப்படுத்துவது சம்பந்தப்பட்ட உரிமையாளரின் கடமையாகும்.

தங்கள் செல்லப்பிராணிகளை மற்றவர்களுக்கு தொந்தரவு அல்லது பொது சுகாதார ஆபத்தை ஏற்படுத்தாமல் வைத்திருக்க வேண்டும்.

செல்லப் பிராணிகளை பொது இடங்களுக்கு அழைத்துச் செல்லும் போது நாய்களை வீடுகள், தெருக்கள், பூங்காக்கள் மற்றும் மக்கள் கூடும் பொது இடங்களில் அழைத்துச் செல்லும் போது கழுத்துப் பட்டையுடன் சங்கிலி இல்லாமல் கொண்டு செல்வதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். பொது இடங்களில் முகமூடி இல்லாமல் திரிய விடுதல் அல்லது அழைத்துச் செல்வதை தவிர்க்க வேண்டும். செல்லப் பிராணிகள் வளர்ப்போர் இந்த நிபந்தனைகளை தவறாது பின்பற்ற வேண்டும். இதனை மீறுவோர் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.