நீட் தேர்வர்கள் கவனத்திற்கு..! நாளை சிறப்பு ரயில் அறிவிப்பு..!

 
train

நாளை ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 21) நாடு முழுவதும் நீட் மறுதேர்வு நடைபெறவுள்ளது. இதில் சேலத்தில் மட்டும் 20-க்கும் மேற்பட்ட பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் நீட் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக, சேலம் அரசு கலைக்கல்லூரி, அரசு மகளிர் கலைக்கல்லூரி, சின்ன திருப்பதி ஜெயராம் பப்ளிக் பள்ளி, செவ்வாய்பேட்டை, அயோத்தியாபட்டினம், அம்மாபேட்டை, கன்னங்குறிச்சி மற்றும் கொண்டலாம்பட்டி பகுதிகளில் உள்ள பிரபல மெட்ரிக் மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் ஆகியவற்றில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

நீட் தேர்வு சிறப்பு ரயில்கள்

மேலும், நாளை மதியம் 2 மணி - 5 மணி வரை நடைபெறும் நீட் தேர்வு எழுதும் மாணவர்கள் ஒரு மணிக்குள், அந்தந்த மையங்களுக்கு வர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், சேலத்தில் நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்காக, சின்னசேலம்-சேலம் மற்றும் திருப்பத்தூர்-சேலம் இடையே நாளை (ஜூன் 21) சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளதாக சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

அதன்படி, சின்னசேலத்தில் இருந்து நாளை காலை 10 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், 11.20-க்கு சேலம் வந்தடையும். அதேபோல, திருப்பத்தூரில் இருந்து ஞாயிறு காலை 7.45 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், காலை 10.45-க்கு சேலம் வந்தடையும். இந்த சேவையினை நீட் தேர்வு எழுதும் மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ளவும் என ரயில்வே நிர்வாகம் தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.