பக்தர்கள் கவனத்திற்கு! இன்று இரவு 11 மணி வரை மட்டுமே ஐயப்பன் தரிசனம்..!
சபரிமலை ஐயப்பன் கோவிலில் 2025-ம் ஆண்டிற்கான மண்டல மற்றும் மகரவிளக்கு கால பூஜைகள் மிகச்சிறப்பாக நடைபெற்று வருகின்றன. கடந்த நவம்பர் 16-ம் தேதி நடை திறக்கப்பட்டு, டிசம்பர் 27-ம் தேதி மண்டல பூஜையும், தொடர்ந்து ஜனவரி 14-ம் தேதி மகரசங்கராந்தி தினத்தன்று சிகர நிகழ்ச்சியான மகரவிளக்கு பூஜையும், மகரஜோதி தரிசனமும் விமரிசையாக நடைபெற்றன. மகரஜோதி அன்று கூட்ட நெரிசலைத் தவிர்க்க 30,000 பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டிருந்ததுடன், பல்வேறு பாதுகாப்பு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டிருந்தன.
தற்போது மகரவிளக்கு உற்சவத்தின் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், பக்தர்கள் தொடர்ந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இதற்கான கால அவகாசம் இன்று (ஜனவரி 19) இரவு 11 மணியுடன் நிறைவடைகிறது. அதுவரை பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என்றும், அதன் பின்னர் முறைப்படி நடை அடைக்கப்பட்டு இந்த ஆண்டிற்கான மகரவிளக்கு பூஜைகள் நிறைவு பெறும் என்றும் கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.


