சென்னை மக்கள் கவனத்திற்கு..! செப்.30ம் தேதி தான் கடைசி நாள்..!
பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் சமீரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள சொத்து உரிமையாளர்கள் செலுத்த வேண்டிய சொத்து வரியினையும், அரசு அலுவலகங்கள், உள்ளாட்சி அமைப்புகள், பொதுத்துறை நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள், தொழில் நிறுவனங்களைச் சார்ந்த பணியாளர்களின் தொழில் வரியினையும் மாநகராட்சிக்கு வரும் செப்.30- ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும்.
வரி செலுத்துவோரின் சிரமத்தினைக் குறைக்கும் விதமாக சொத்து வரி, தொழில் வரி, நிறுவன வரி மற்றும் வரியில்லா இனங்கள் ஆகியவற்றிற்கான கட்டணங்களை செலுத்துவதற்கு ஏதுவாக சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மண்டல அலுவலகங்கள் மற்றும் வருவாய்த்துறை தலைமையிடத்தில் பொது வசூல் மையம் இயங்கும்.
பெருநகர சென்னை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட அரசு அலுவலகங்கள், உள்ளாட்சி அமைப்புகள், பொதுத்துறை நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள் தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டம் 1998-ன் பிரிவு 117-ன் படி, பணியாளர்களின் ஊதியத்திலிருந்து தொழில் வரியினை பிடித்தம் செய்து பெருநகர சென்னை மாநகராட்சிக்கு செலுத்துவது அந்நிறுவனங்களின் சட்டபூர்வ கடமையாகும். அவ்வாறு பிடித்தம் செய்யப்பட்ட தொழில் வரியினை வரும் செப்டம்பர் 30- ஆம் தேதிக்குள் பெருநகர சென்னை மாநகராட்சிக்கு செலுத்தப்பட வேண்டும்.
மேலும், சொத்து உரிமையாளர்கள் பெருநகர சென்னை மாநகராட்சிக்கு செலுத்தப்பட வேண்டிய சொத்து வரியினை வரும் செப்.30- ஆம் தேதிக்குள் நிலுவையின்றி செலுத்தப்பட வேண்டும். தவறும் பட்சத்தில் தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் விதிகள் 2023 விதி 268 (3)ன் படி தனிவட்டி விதிக்கப்பட வேண்டும்.
எனவே, வரி செலுத்துவோரின் சிரமத்தினைக் குறைக்கும் விதமாக சொத்து வரி, தொழில் வரி, நிறுவன வரி மற்றும் வரியில்லா இனங்கள் ஆகியவற்றிற்கான கட்டணங்களைச் செலுத்துவதற்கு ஏதுவாக வரும் செப்.19, 20, 26, 27 ஆகிய நாட்களில் (சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில்) மண்டல அலுவலகங்கள் மற்றும் ரிப்பன் கட்டடம் தலைமையிடத்தில் உள்ள வருவாய்த்துறை பொது வசூல் மையங்கள் (Common Collection Centre) செயல்படும் என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது." என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

